நாளை ரியூப் தமிழ் எப்.எம் முதலாம் ஆண்டு விழா புத்தக சந்தை ஆரம்பம்

நாளை 18.11.2018 ஞாயிறு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ரியூப்தமிழ் காரியாலயத்தில் ரியூப்தமிழ் எப்.எம் வானொலி தொடங்கிய முதலாம் ஆண்டு நிறைவு நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது.

இலங்கையில் வாழும் இளையோர் கரங்களில் ஒரு வானொலி சேவையை ஒப்படைத்து, அதை 24 மணி நேரமும் அவர்களே சுயமாக கொண்டியக்கும்படியாக வழங்கப்பட்ட வாய்ப்பு உண்மையில் ஒரு தலை சிறந்த சமுதாயப்பணியாகும்.

போர் தந்த சுமைகளையும் வலிகளையும் தூக்கி வீசி நிமிர்ந்தெழ இது அவசியமாகும்.

போருக்குப் பிற்பட்ட எல்லாம் இழந்த வெற்றிடமான சமூகவியல் வாழ்வில் இருந்து மக்கள் மீண்டு வருவதானால் அதைவிட கொடுமை வேறெதும் கிடையவே கிடையாது. போர் பற்றி வாய்கிழிய பேசிய உலக நாடுகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கிய நிதி யானைப்பசிக்கு சோளப் பொரி போன்றதே.

போருக்கு பின் ஏறத்தாழ உலகம் அந்த மக்களை கைவிட்டுவிட்டதென்றே கூற வேண்டும். இவர்கள் செய்த வேலையால் சமுதாயம் கருகிக் கிடக்கிறது. அழிவுக்கு துணை போன உலகம் அதை துளிர்க்க வைக்கும் விசுவாசம் கொண்டதாக இல்லை.

எங்கும் நம்பிக்கை வரட்சியையே சர்வதேச நாடுகள் விதைகளாக தூவியுள்ளன.. இந்த அவலமான நிலையில்..

இளைஞர்களிடையே செயல் ஊக்கத்தை வளர்த்தல், தன்னம்பிக்கையை விதைத்தல் ஆகிய இரு பெரும் பணிகளை செய்வதே ஆக்கபூர்வமான வழியென மதிப்பிட்டு ரியூப்தமிழ் நிறுவனம் எடுத்த முயற்சியின் முதலாண்டு வெற்றித்திருநாள் நாளை.

இவைகளுடன் ரியூப்தமிழ் பத்திரிகை, சஞ்சிகை என்பனவும் வெளியாகி வருவதுடன், வடக்குக் கிழக்கு இணைந்த உதைபந்தாட்டத்தையும் முன்னின்று ஆரம்பித்து வைத்தது ரியூப் தமிழ் நிறுவனமே.

இந்த முற்;போக்கு பணிகளில் அடுத்ததாக ரியூப்தமிழ் நிறுவனம் நாளை மேலும் ஒரு புதிய பணியை ஆரம்பிக்கிறது. அதுதான் ரியூப் தமிழ் புத்தகச் சந்தையாகும்.

இனி ரியூப் தமிழ் நிறுவனம் தானே முன்னின்று மிகச்சிறந்த புத்தகங்களை வெளியிட இருக்கிறது. இதுவரை எந்த முதலாளியுமே முன்னெடுக்கத் துணியாத, எந்த உரிமைக்காக போராடும் அரசியல் தலைவர்களுமே சிந்திக்க மறுத்த மறந்த ஒரு விடயமே தரமான புத்தகங்களை வெளியிடும் சந்தையை ஆரம்பிப்பதாகும்.

இனிமேல் இலங்கையில் ரியூப் தமிழ் வெளியீடாக மாதம் ஒரு புத்தகம் வெளிவர இருக்கிறது.. நாளையே இலங்கை முழுவதும் இந்த விற்பனை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

ஈழத்தின் படைப்பிலக்கியம் வரலாற்று சாதனை படைக்கும் என்று கூறியவர்கள் இதுவரை காலமும் தமக்கொரு கவன ஈர்ப்பை கொடுக்கவே அந்தப் போலி வார்த்தையை பேசியிருக்கிறார்கள் என்பதை இனியும் அம்பலப்படுத்தாமல் மடியில் புதைத்து வைத்து கனவு வசனம் பேச முடியாது.

உண்மை உண்மைதான்.. எவனையும் நம்பி பயனில்லை நாமே களமிறங்க வேண்டும்..

புத்தகங்களும், எழுத்தும் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கான விற்பனை பாதை அமைக்கப்பட வேண்டும். தண்டவாளம் இல்லாமல் ரயில் செய்தது போலவே இன்று நமது புத்தக வெளியீடுகளும், அவசரமான வெளியீட்டு விழாக்களும் இருக்கின்றன.

இவற்றை மாற்றியமைக்க களமிறங்குகிறது ரியூப் தமிழ். அந்த வகையில் கடந்த செப்டெம்பர் 16 ம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்ட உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் இரண்டாவது பதிப்பாக யாழில் அச்சடிக்கப்பட்டு நாளை ரியுப் தமிழ் புத்தக சந்தையின் முதல் வெளியீடாக வெளி வருகிறது.

இனி மாதம் தோறும் புத்தகங்கள் வெளியிடும் புதிய எழுச்சிப் பணியும் தொடக்கி வைக்கப்படுகிறது. அலைகடலென ஆர்ப்பரித்து நிற்கிறது தாயக இளைஞர் கூட்டம்.

வடக்கில் உள்ள புத்தகக் கடைகளில் இருந்து பல விற்பனையாளர் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள். பல பாடசாலைகள் இப்போதே புத்தகத்தை வாங்க முன்பதிவும் செய்துவிட்டன.

250 ரூபா புத்தகம் பாடசாலைகள் கழகங்களுக்கு 25 வீத விலைக்கழிவு.

இலங்கையில் போருக்கு பின் முற்றாகவே அழிவடைந்துவிட்ட ஒரு துறையை மீண்டும் புதியதோர் கோணத்தில் வளர்த்தெடுப்பதற்கு கார்ப்பரேற் கிரிமினலாக இல்லாத தாயக நேசம் கொண்ட ஒரு நிறுவனமே அவசியம்.

அந்த இடத்தை இன்று உறுதியாக நிரப்பியுள்ளது ரியூப் தமிழ் என்பதை இந்த நிகழ்வு மேலும் ஒரு தடவை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டவுள்ளது.

அதுபோல போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ரியூப் தமிழின் நடனப்பள்ளியும் அறிமுகமாகிறது. வன்னியில் வரும் பொங்கலுக்கு இதன் மகத்தான ஆரம்ப விழா நடைபெற இருக்கிறது. அதற்கான புதிய ஏராவும் நாளை ஓடப்பட இருக்கிறது.

வாழ்க ரியூப் தமிழ் எப்.எம்.

இது அரிய பணி.. நாமும் கரங்கோர்ப்போம்.. ஊழல் இல்லாத உன்னதங்களை உண்மையாகவே உருவாக்குவோம் என்ற வாசகங்கள் காதுகளில் கேட்கின்றன.

அலைகள் 17.11.2018

Related posts