அமீர்கானின் தக்ஸ் இந்தோஸ்தான் ஒரு தோல்விப்படமே..!

இந்தியாவின் சினிமாவில் சில படங்கள் அமெரிக்க ஹொலிவூட்டை நெருங்கிக் கொண்டிருப்பதை இனியும் மறுக்க முடியாது. அதற்கு இன்னோர் உதாரணம் அமீர்கான் நடித்துள்ள தக்ஸ் இந்தோஸ்தான்.

திரைப்பட தயாரிப்பில் மிகச்சிறந்த தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டு பெரும் பொருட் செலவில் தயாராகியிருக்கிறது. முதல் அரை மணி நேரம் படம் சூப்பர் ஹிட் என்ற எண்ணத்தை உருவாக்கி அதற்கு பின் வந்த ஒவ்வொரு நிமிடமும் தொடர்ந்து வீழ்ந்து சென்று.. கிளைமாக்ஸ் 15 நிமிடங்களில் இராவணன் சிலைக்குள் வெள்ளைகாரனை கொழுத்தி பா.ஜ.கவிற்கு வால் பிடிக்க முற்பட்டபோது, இராவணன் சிலைக்கு முன்னரே படம் குப்புற விழுந்துவிடுகிறது. பாவம் அமீர்கான் தனது மரியாதையை காப்பாற்றி இந்தப் படத்தில் நடிக்காமலே விட்டிருக்கலாம் என்ற வருத்தத்தை தருகிறது.

படத்தின் கதை லயன் கிங் மேலும் ஸ்கிPன்பிளேயும் அதுதான். பாகுபலியும் இதுவும் ஒன்றுதான். பாகுபலியில் வந்த கிட்டப்பா சத்தியராஜ்தான் இங்கு அமிதாப்பாச்சன். லயன் கிங்கில் வரும் குரங்கு பாத்திரம்தான் இங்கு சந்தியராஜ் – அமிதாப்பாச்சன் பாத்திரங்கள்.

அமிதாப்பாச்சனுக்காக திரைக்கதையை கோட்டைவிட்டுவிட்டார்கள்.. அவர் தற்கொலை படையாய் போய் திரும்பி வருகிறாரே.. அதைவிட பெரிய கூத்து கிடையாது. போயும் போயும் இந்த லூசுப்பயலுகளை நம்பி படம் பார்க்க வந்தோமே என்று அழுகையாக வந்ததாக ஒருவர் கூறினார்.

அதுபோல கதாநாயகியையும் தப்பான ஒருவரை அடையாளம் காட்டிவிட்டார்கள். காரணம் இந்தித் திரையுலகில் பெரிய கதாநாயகி என்பதற்காக திரைக்கதையை அவருக்காக வளைத்தது அபத்தம்.

ஸ்டன்ட் காட்சிகளில் கதாநாயகியால் நடிக்க முடியாது என்பதால் வேறொருவரை போட்டு உல்டா பண்ணி இரண்டு தோணிகளில் கால் வைத்துவிட்டார்கள். இதுதான் இந்திய சினிமா எக்காலத்திலும் ஹொலிவூட்டை முந்த முடியாது என்பதற்கான உதாரணம்.

படத்தில் பாடல்கள் தேவையற்று பொருத்தப்படுகின்றன. கதாநாயகன், கதாநாயகியின் உள்ளக வளர்ச்சியை சரியாக செய்து வந்து, கடைசியில் பா.ஜ.க – இந்துஸ்தானி போன்ற சிக்கல்களுக்கு பயந்து கிளைமாக்சை மாற்றி கோட்டைவிட்டுவிட்டார்கள்.

கடைசியில் முஸ்லீமான அமீர்கான் பல கோடிகளை உழைத்து பா.ஜ.கவின் இன்றைய மதவாத அரசியலில் மாட்டிக் கொள்ளாமல் தடுக்க என்ன செய்வது..? அவருடைய பல கோடிகளை காப்பாற்ற எண்ணி எடுத்த இராவணன் சிலை எரிப்பு மிக மோசமான செயல்.

வெள்ளைக்கார ஏகாதிபத்தியமும் இராவணனும் ஒன்று என்று காட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் வெள்ளையின அடிமைகளான இந்தியர்கள் இராவணனை வெள்ளைக்காரனாக காண்கிறார்கள் என்பதால் சிலோன் ராவணன் தப்பிப் பிழைத்தான்.

உண்மையில் இராவணன் என்றால் யார்.. அவன் இராமாயணத்தில் வரும் ஒருவனா இல்லை வில்லன் பாத்திரத்தின் குறியீடா..?

இந்தப்படம் இராவணனை வில்லன் பாத்திரத்தின் குறியீடாகவே பார்த்திருக்கிறது. இப்படி அமிதாப்பாச்சன் முதல் அடிமட்ட அரசியல்வாதிகள் வரை அனைவரையும் திருப்திப்படுத்த புறப்பட்டு, கடைசி அமிதாப்பாச்சனுக்கு சலாம் போடும்போது அமீர்கான் என்ற அற்புதமான கலைஞன் தன்னை முற்றாகவே தொலைத்து பூஜ்ஜியத்தை தொடுகிறான்.

பாவம் இந்த கோடிகளை வைத்து என்ன செய்யப்போகிறார்..?

நடுக்கடலில் போனாலும் நாய்க்கு நக்குத்தண்ணிதான் என்ற நிலையே இந்திய சினிமாவுக்கும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

இனி சங்கரின் கூத்து வருகிறது.. அவரும் ஐ படத்தின் கிளைமாக்சில் மிகப் பெரிய தவறு இழைத்தவர். அவருடைய சரக்கு முடிந்து பத்தாண்டுகளாகிவிட்டது. அவர் தன்னை திரைக்கதை ரீதியாக புதுப்பித்துக் கொள்ளவில்லை. பிரமாண்டம் மட்டும் திரைப்படமாகாது. இனி அவர் 2.0 ல் என்ன செய்யப்போகிறார் என்பது வயிற்றை கலக்குகிறது.

அவரும் லைக்காவின் பணக்கடலில் நின்று நக்கித்தான் குடிக்கப்போகிறாரா காத்திருக்கிறது திரையுலகு.

தக்ஸ் இந்தோஸ்தான் ஒரு தோல்வி திரைப்படமே.

அலைகள் 17.11.2018

Related posts