சஜித் பிரேமதாசவும் சபாநாயகரும் முழக்கம் உயிர் கொடுக்கவும் தயார்..!

இது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி எமது உயிரைத் துறக்கவும் தயாரென ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று தோன்றிருக்கும் பிரச்சினை ஜனநாயகத்திற்கும் ஏகாதிபத்திய தீர்ப்பிற்கும் இடையிலான பிரச்சினையாகும். எங்களுடைய ஜனநாயக நாட்டினுள்ள தனி ஒரு மனிதன் தான் தோன்றித்தனமாக ஆட்சி செய்ய முடியாது. இது ஏகாதிபத்திய நாடல்ல, ஜனநாயக நாடாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வீதியில் இறங்கி எமது உயிரை துறக்கவும் தயார்.

வாக்கெடுப்புக்களுக்கு பயந்தவர்கள் மக்களின் பலம் இல்லாதவர்கள், திருட்டு வழியில் பிரதமர் பதவியையும் அரசாங்கத்தையும் கைப்பற்றியவர்கள் இன்று பாராளுமன்றிற்குள் வாக்கெடுப்பிற்கு பயந்துள்ளார்கள்.

அதனால் தான் பாராளுமன்றிற்குள் வாக்கெடுப்புக்கு விடும் போது காட்டுவாசிகளையும் விட மோசமாக செயற்படுகிறார்கள். அடிக்க வருகிறார்கள், வெட்ட துடிக்கிறார்கள், சபாநாயகரின் ஒலிவாங்கியை உடைக்கிறார்கள், அரச சொத்தை வீணடிக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் அவர்களுக்கு சொல்வது என்னவென்றால் பாராளுமன்றில் அமைச்சு பதவி மற்றும் மக்கள் பலம் இல்லாதவர்களுக்கு விஷேடமாக சொல்லிக்கொள்வது என்னவென்றால் நாங்கள் தோட்டாக்களுக்கு பயமில்லை. நாங்கள் கட்டுத்துப்பாக்கிகளுக்கு பயமில்லை. வாள் , கத்திகளுக்கு பயமில்லை. தற்கொலை செய்துகொள்ளும் குண்டுதாரிகளுக்கும் பயமில்லை. நாங்கள் உறுதியாக ஜனநாயகத்தின் மூலம் வெற்றி பெறுவோம் எனக் கூறிக்கொள்கிறேன்.

இவர்களது மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் பயந்து விடுவோம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று கூறிக்கொள் விரும்புகிறேன் இவர்களது மிரட்டல்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி ஒரு போதும் பணியாது ஐக்கிய தேசிய கட்சி தலைவர் உட்பட அனைவரும் உயிர்த்தியாகம் செய்தாவது ஜனநாயகத்தை நிலைநாட்ட தயாராகவுள்ளோம்.

இன்று விவசாயிகள் அநாதைகளாகியுள்ளனர். கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்கள். இந்த மக்களை கட்டி காக்க வேண்டும்.

பெரும்பான்மையில்லாத சிறுபான்மையினருக்கு தில்லிருந்தால் நளை பாராளுமன்றில் மூன்றாவது முறையாகவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கூறிக்கொள்கிறேன்.

நாங்கள் தேர்தலுக்கு பயந்தவர்கள் இல்லை தேர்தலுக்கு தயார் ஜனாதிபதிக்கு தில்லிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்ட சொல்லுங்கள் இந்த சவாலை பகிரங்கமாக தெரிவிக்கின்றேன்” என தெரிவித்தார்.

—————–

பாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரையோ அமைச்சரவை அமைச்சர்களையோ ஏற்றுக் கொள்வதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குவதாகவும், அதற்கு தனக்கு உரிமை இருப்பதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

—————-

கட்சித் தலைவர்கள், சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

——————

Related posts