‘சர்கார்’ வசூல் : கேரளாவில் தோல்வி

தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் ‘சர்கார்’ திரைப்படத்துக்கு வரவேற்பு இருந்தாலும், கேரளாவில் போதிய வரவேற்பில்லை என்று தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, மூன்றாவது முறையாக இணைந்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது.

தமிழகத்தில் ஏரியா வாரியாக படத்தின் உரிமையை கடுமையான போட்டிக்கு இடையே, பெரும் விலைக் கொடுத்து விநியோகஸ்தர்கள் கைப்பற்றினார்கள். படம் வெளியாவதற்கு முன்பு நடைபெற்ற வியாபாரத்தில் ‘பாகுபலி 2’ படத்தை விட ‘சர்கார்’ அதிகம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.

தமிழகத்தில் முதல் நாளில் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, முந்தைய சாதனைகள் அனைத்தையுமே முறியடித்தது. இது மிகப்பெரிய சாதனையாக கருதுகப்படுகிறது. தமிழக அமைச்சர்களின் எதிர்ப்பு உள்ளிட்டவற்றால் இப்போதும் நல்ல கூட்டம் இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

உலகளவில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக சினிமா வியாபார வட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், அதிகாரப்பூர்வமான கணக்கு அவர்கள் தான் வெளியிட வேண்டும்.

இதர மாநில வசூல் நிலவரங்கள்:

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் ‘சர்கார்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியான 6 நாட்களில் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இன்று (நவம்பர் 13) வசூலாகும் பணம் அனைத்துமே விநியோகஸ்தருக்கு லாபம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவிலும் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் செய்து வருகிறது ‘சர்கார்’. 4 நாட்களில் 10 கோடி வசூலை கடந்திருக்கிறது.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கேரளாவில் ‘சர்கார்’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தமிழகத்தைத் தாண்டி விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பதால், அங்கு பெரும் விலைக் கொடுத்து உரிமையைக் கைப்பற்றினார்கள். 175 அடி கட்-அவுட், முதல் நாள் திரையரங்குகளில் குவிந்த பெண்கள் கூட்டம், பெண்களுக்கென்று தனிக்காட்சி என ‘சர்கார்’ படம் தொடர்பான கேரள வீடியோக்கள் சமூகவலைத்தளத்தை ஆட்கொண்டன.

முதல் நாள் 6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, கேரளாவில் ‘பாகுபலி 2’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது ‘சர்கார்’. ஆனால், 2-ம் நாள் வசூல் முதல் நாள் வசூலை விட பாதித்தான் என்கிறார்கள். முழுமையாக தமிழகம் சார்ந்த அரசியலை மையப்படுத்திய படம் என்பதால், கேரள மக்களிடையே அவை எடுபடவில்லை என தெரிகிறது. ’மெர்சல்’ வசூலை ஒப்பிடும் போது, இது பெரிய வசூல் அல்ல. ஆனால், கேரள உரிமையை எப்படி கொடுத்திருக்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லாததால் விநியோகஸ்தருக்கு வெற்றியா, தோல்வியா என்பது கணிக்க முடியாததாகவுள்ளது.

சென்னை வசூல் எப்படி?

சென்னை திரையரங்குகளில் இதர படங்களின் வசூலை விட பல மடங்கு முன்னணியில் இருக்கிறது ‘சர்கார்’ வசூல். 6 நாட்களில் சுமார் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. அமிதாப்பச்சன், அமீர்கான் நடிப்பில் வெளியான ‘தக்ஸ் ஆஃப் ஹிந்த்தோஸ்தான்’ படம் படுதோல்வியை தழுவியிருப்பதால், அனைத்து மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலுமே ‘சர்கார்’ படத்துக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார்கள்.

தமிழக வசூல் எப்படி?

தமிழகத்தில் 100 கோடி வசூலை கடந்திருக்கிறது. ஆனால், விநியோகஸ்தர்கள் முன்பணமாக பெரும் தொகை கொடுத்திருப்பதால், இன்னும் அதிகப்படியான வசூல் செய்ய வேண்டியதுள்ளது. இதுவரை உள்ள வசூல் நிலவரப்படி, போட்ட தொகையில் சுமார் 75% கைக்கு வந்திருக்கிறது. இன்னும் 25% இன்னும் ஓரிரு வாரங்களில் வந்துவிடும் என்று விநியோகஸ்தர்கள் நம்புகிறார்கள். தயாரிப்பாளருக்கு பெரிய லாபகரமான படமாக ‘சர்கார்’ அமைந்திருக்கிறது

வெளிநாடுகளில் வசூல் எப்படி?

நவம்பர் 11ம் தேதி வரை ‘சர்கார்’ படத்தின் வசூல் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலரை நெருங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் 3.63 கோடியும், ஆஸ்திரேலியாவில் 2.21 கோடியும், நியூசிலாந்தில் 20.05 லட்சமும் வசூல் செய்திருப்பதாக இந்திய திரையுலகின் முன்னணி வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Related posts