இலங்கை தொடர்பில் செயற்பட ஐரோ. ஒன்றியத்துக்கு அதிகாரமில்லை

இலங்கை தொடர்பில் செயற்படுவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று வெளியிட்ட பதில் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ள இச் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்றும் இராஜாங்க அமைச்சர் இதில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தால் செயற்பட முடியுமா என்பது தொடர்பில் எனக்கு தெரியாது. எனினும் நாட்டின் உள்விவகாரத்தில் இதுபோன்ற வெளிநாட்டு அமைப்பொன்று அழுத்தம் கொடுப்பதையிட்டு நான் மிகுந்த கவலையடைகிறேன். இதுபோன்ற அழுத்தம் உருவாகுவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோரே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இறைமையுடைய நாடொன்றின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு தாக்கத்தை உருவாக்கும் வகையில் நடப்பது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும். பாராளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசியலமைப்புக்கமையவே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts