இனி தொண்டமானின் திருவிளையாடல் பருவம்..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கப் போவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் தம்மிடமும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திடமும் தொழிலாளர்களிடமும் கருத்துக்களைப் பெற்று தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெருந்தொட்டத் தொழிற்துறையைச் சார்ந்து 30 இலட்சம் மக்கள் உள்ளதுடன் இது இலங்கையில் முழு சனத்தொகையில் 10 வீதமாகவுள்ளது. அண்மைக்காலமாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பள உயர்வு கோரி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாக இடம்பெற்றன. இறுதியில் அது எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றது.

இந்நிலையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர் மாநாடுகளை நடத்தினர். இதன்போது, அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுக்கும் வரை சம்பள உயர்வுப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்திருந்தனர்.

நாளை 06 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிருப்பதால் அதன்பின்னர் சம்பள உயர்வுப் போராட்டமொன்றை மலையகம் தழுவிய ரீதியில் நடத்தப்போவதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

Related posts