அமெரிக்கா தபால் பொதி குண்டுகள் பிரதான சந்தேக நபர் கைது

அமெரிக்காவில் டெமக்கிரட் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் அதிபர்களை குறி வைத்து பார்சல் குண்டுகளும், தபால் குண்டுகளும் அனுப்பப்பட்டு வருவது தெரிந்தே.

இந்த விவகாரத்தில் முக்கிய சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் 14 குண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு குண்டுகளில் கைதான நபரின் கைவிரல் அடையாளங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைதான நபர் காஸ்சர் அல்ரறி சயோக் என்ற 56 வயது நபராகும். இவர் அமெரிக்க அதிபரின் றிப்பப்ளிக்கன் கட்சி உறுப்பினராகும்.

பி.வி.சி பிளாஸ்டிக் குழாய்களில் பற்றரி பொருத்தி, வெடி மருந்து அடையப்பட்ட இந்தக் குண்டுகள் அனைத்தும் வெடிக்கக் கூடியவை என்று வேர்ஜீனியா பகுதியில் எப்.பி.ஐ நடத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.

கைதான நபர் மீது வெடிகுண்டு தயாரித்தமை, கொலை முயற்சிகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல சரத்துக்களில் வழக்குகள் தொடரப்படவுள்ளன.

இந்த நபர் அமெரிக்க அதிபரின் றிப்பப்ளிக்கன் கட்சியின் பலத்த ஆதரவாளர் பல காணொளிகளை அதற்கு ஆதரவாக தயாரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இந்த விவகாரம் அமெரிக்க மண்ணில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று டொனால்ட் ரம்ப் கூறியிருக்கிறார். மறுபும் மேலும் ஒன்றரை வார காலத்தில் வரவுள்ள அமெரிக்க காங்கிரஸ், செனட்டிற்கான இடைக்கால தேர்தலில் தமது கட்சிக்கு பலமான ஆதரவு இருந்தாகவும் இந்த வெடி குண்டு விவகாரத்தால் அது அடிபட்டுப் போய்விட்டதாகவும் ரம்ப் கவலை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்கள் வெடிகுண்டு விவகாரத்திற்கே முக்கியம் கொடுத்து செய்திகளை வெளியிட்டதால் பேசப்பட வேண்டிய தேர்தல் செய்திகள் பேசப்படாமலே போய்விட்டன என்பது அவர் கருத்தாகும்.

அதைவிட சமூக வலைத்தளங்களில் ஏராளமான பொய் செய்திகள் பரவிக்கொண்டிருப்பதாகவும் கண்டித்துள்ளார். இடைக்கால தேர்தலில் டொனால்ட் ரம்பின் றிப்பப்ளிக்கன் கட்சி தோல்வியடைந்து பெரும்பான்மை இழந்தால் அதிபருக்கு பலத்த சிக்கல் ஏற்படும்.

அதிபரின் தேர்தல் விவகாரம் தொடர்பாக நடைபெறும் றொபேட் மூலர் விசாரணைகள் மேலும் தீவிரம் பெறும் என்பதால் றொனால்ட் ரம்பின் எதிர்காலத்துடன் இந்தத் தேர்தல் தொடர்புபடுவதால் மிகவும் முக்கியம் பெற்றுள்ளது.

2016 ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட ஆறாத காயங்களை ஆற்ற தொடரும் அடுத்த கட்ட மோதலாகவே இது இருக்கிறது.

இதனால் தேர்தல் என்பது வாக்களிப்புடன் முடியாது பெரும் வன்மமாக மாறியிருக்கிறது. ஜனநாயகம் உலகத்தின் அதி நவீன ஊடகத்துறை வளர்ச்சிக்கு முகம் கொடுக்க முடியாமல் மூச்சு திணறி நிற்கிறது.

கிரேக்கத்தில் மரத்தடியில் ஆரம்பித்த ஜனநாயகம் 21ம் நூற்றாண்டின் மாற்றங்களை சந்திக்க வேண்டிய காலமாக இது இருக்கிறது.

எல்லோருமே முக நூல் வழியாக சிந்தனை சிற்பிகள் போல கருத்துரைக்க புறப்பட்டதால் உருவாகியிருக்கும் மாற்றங்கள் சென்ற நூற்றாண்டைப் போல இல்லை.

ஒருவரை ஒருவர் தோற்கடிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து மிக மோசமாக பிளவுபட்டு நிற்கிறார்கள்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசும் போது மிகவும் மோசமான பொய்களை அமெரிக்க அதிபர் கூறி வருகிறார் என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

வரும் நவம்பர் 6ம் திகதி இடைக்கால தேர்தல் வருகிறது.. அதுவரை பொறி கக்கப் போகிறது அமெரிக்கத் தேர்தல் களம்.

பேஸ்புக்களில் இலட்சக்கணக்கான பொய் கணக்குகள் ஏற்படுத்தப்பட்டு மோசமான பொய்கள் பரவ விடப்பட்டு வருகின்றன.

அலைகள் 27.10.2018

Related posts