இலங்கை அதிபரை இந்தியா கொல்ல முயன்றதா ?

இலங்கை அதிபர் சிறிசேனாவைக் கொலை செய்ய முயற்சித்தது யார் என்பது தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட சீனாவின் உதவியை அந்த நாடு நாடியுள்ளது.

சீனத் தொலைபேசி நிறுவனமான ஹூவேய் நிறுவனத்தின் தகவல்களை ஆராய்ந்து அதைக் கண்டுபிடிக்க இலங்கை கோர்ட்டின் உத்தரவை அரசு பெற்றுள்ளது.

ஒரு மூத்த போலீஸ் அதிகாரியுடன் இந்த சதித் திட்டம் குறித்து தான் பேசியதாக போலீஸ் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இவர்தான் சிறிசேனாவைக் கொல்ல சதி நடப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்தியாவின் ரா உளவு நிறுவனம்தான் கொலைச் சதியில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை அதிபர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

நமலிடம் இதுகுறித்து இலங்கை காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இலங்கை அதிபர் மட்டுமல்லாமல், முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவையும் கொல்ல சதி நடந்ததாக கூறியிருந்தார் நமல்.

இதற்கிடையே நமல் பயன்படுத்திய தொலைபேசியின் பேச்சு விவரங்களை ஆராய முடிவு செய்துள்ளது இலங்கை சிஐடி போலீஸ். இதுதொடர்பாக ஹூவேய் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற கோர்ட் அனுமதியை அது பெற்றுள்ளது.

நமல் தனது போனில் அனைத்து விவரங்களையும் அழித்து விட்டதால் ஹூவேய் நிறுவனத்திடமிருந்து அவற்றைப் பெற போலீஸ் முடிவு செய்துள்ளது.

முன்னதாக கொலைச் சதித் திட்டத்தில் தொடர்புடையதாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த எம்.தாமஸ் என்பவர் கடந்த செப்டம்பர் 22ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனக்கு இலங்கை சிஐடி போலீஸால் உயிருக்கு ஆபத்து ஏர்பட்டிருப்பதாகவும், தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆனால் கோர்ட் அதை ஏற்க மறுத்து விட்டது.

Related posts