சிறப்புக் கட்டுரை: ராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா?

சிறப்புக் கட்டுரை: ராவணன் தீய சக்தியா, நல்ல சக்தியா?
டி.எஸ்.எஸ்.மணி

2018, அக்டோபர் 19ஆம் தேதி வழக்கம் போல வடநாட்டில் தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில், தசரா பண்டிகை கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழன் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணித்து, ராவணன் கொடும்பாவியை எரிப்பது என்ற ஆண்டாண்டு காலமாய் செய்துவரும் பழக்கத்தைப் பின்பற்றினார்கள். வழக்கம் போல, இந்தியாவை ஆளும் கட்சிகளின் தலைவர்கள் முன்னே நின்று அந்தக் கொண்டாட்டத்தைச் செய்தார்கள். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் ராவணன் வதத்தில் கலந்து கொண்டனர்.

ராவணன் கொடும்பாவி எரிப்பு

ராவணனின் கொடும்பாவி மீது பிரதமர் நரேந்திர மோடி வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு ஓர் அம்பை எய்வது போன்ற படங்களும் பெருமையாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொண்ட ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதும், வாஜ்பாயுடன் எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்ட ராவணன் எரிப்பு நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. ஆகவே, இதுதான் டெல்லியில் பண்பாட்டுப் பழக்கமாக இருந்து வருகிறது.

இந்த முறை பஞ்சாபில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வில் ரயில்வே தண்டவாளம் அருகே அதை நடத்தி, விரைவுத் தொடர்வண்டி வருகிற நேரத்தில் தண்டவாளத்திலிருந்த அப்பாவி மக்கள் அறுபது பேரைக் கொல்லக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரான விளையாட்டு வீரர் சித்துவின் (தமிழ் மீது தனக்கு பாசம் இல்லை என்று சமீபத்தில் பகிர்ந்தவர்) மனைவி கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு தமிழர்கள் பற்றியும், ராவணன் பற்றியும் தவறாகச் சித்திரித்து நாடெங்கும் பரப்பப்படும் கதைகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

மாவீரன் ராவணன்

அதேநேரம், வடஇந்தியாவில் பல இடங்களில், ஆதிவாசி மக்கள் ராவணனைத் தங்களது மாவீரனாகவும் கடவுளாகவும் வழிபடுகிறார்கள். உத்தராகண்ட் மாநிலத்தில் பைஜிநாத் கங்கிரா போன்ற இடங்களில் அவர்கள் ராவணனைக் கடவுளாக நினைக்கவிட்டாலும், சிவனுடைய தீவிர பக்தன் என்று போற்றுகிறார்கள். ராவணனின் கொடும்பாவியை எரித்தால் சிவன் கடவுள் கோபம் கொள்வார் என்கிறார்கள். தசராவைக் கொண்டாடி ராவணனின் கொடும்பாவியை எரிப்பவர்கள், செயற்கை மரணத்தில் சாவார்கள் என்கிறார்கள். அப்படி உயிரிழந்த குடும்பங்களின் கதைகளையும் கூறி வருகின்றனர்.

மண்டோதரி பிறந்த இடம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மால்வா பிராந்தியத்தில் மாண்ட்ஸாவுர் பகுதியில் ராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த ஊர், தங்கள் ஊர் என மக்கள் கருதுகின்றனர். அதனால் ராவணனைத் தங்கள் ஊரின் மருமகன் என்று எண்ணுகின்றனர். அதுமட்டுமின்றி, ராவணன் ஒரு சிறந்த படித்த அறிவாளி எனப் போற்றுகின்றனர். தங்கள் ஊர் மருமகன் ராவணனுக்கு முப்பத்தைந்து அடி உயரச் சிலை ஒன்றை வைத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் டெல்லியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் பிஸ்ராக் என்ற சிறிய கிராமத்தில் ராவணன் தங்கள் ஊர்க்காரர் என்று பெருமையுடன் கூறுகிறார்கள். தங்கள் கிராமத்தின் வைஷ்ரவாவுக்கும், பெண் தெய்வம் கைகேசிக்கும் பிசராகில் பிறந்தவர்தான் ராவணன் என்கிறார்கள். ராவணனை மகா பிராமணன் என்று அழைக்கிறார்கள். தசரா நேரத்தில் ராவணனுக்காக அவர்கள் நினைவேந்தல் செய்து அவரது ஆன்மா அமைதி நாட வேண்டுகின்றனர். ராவணனின் தந்தை வைஷ்ரவா தங்கள் ஊரில் சுயம்புவான சிவலிங்கத்தை உருவாக்கியவர் என்கிறார்கள்.

பழங்குடி அரசர் ராவணன்

அதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் கோண்டு பழங்குடிகள் முந்நூறு பேர் மட்டுமே வாழும் சிறிய கிராமமான பர்ஸவாடியில் ராவணனைத் தங்களது கடவுளாக வழிபடுகின்றனர். தங்களை ராவண வம்சத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதை மறுக்கின்றனர். இந்தக் கிராமத்து பழங்குடி கோண்டு மக்கள், ராவணன் ஒரு கோண்டு பழங்குடி அரசர் என்றும், அவர் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்டார் என்றும் கூறுகின்றனர். வால்மீகி ராமாயணம் ராவணனை ஒரு வில்லனாக விவரிக்கவில்லை என்றும், துளசிதாஸ் ராமாயணம்தான் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ராவணன் திருமணம் செய்த இடம்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள மண்டோரி, மண்டோதரி, ராவணனை மணம் முடித்த இடம் என்று கூறப்படுகிறது. மண்டோதரி என்ற அந்த ஊரில் உள்ள, ராவண கி சன்வாரியில் அந்தத் திருமணம் நடந்தது என்கிறார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மௌத்கில்ஸ் என்ற பிராமணர்கள், ராவணனை தங்களது மருமகன் என்கிறார்கள். அதனால் இந்தியாவின் மற்ற பகுதிகளை போல இங்கே, ராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த ராவண கி சன்வாரியில், ராவணனுக்கு ஸ்ராத்தம், பித்ரு தானம் ஆகிய இறந்தவர்களுக்குச் செய்யப்படும் நினைவேந்தல்கள் இந்து முறைப்படி செய்யப்படுகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், கான்பூரில், ஷிவாலாவில் உள்ள சிவன் கோயிலில், ராவணனுக்கும் ஒரு கோயில் உள்ளது. தசரா அன்று தஷணன் கோயில் வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் ராவணனை மனதுக்கும் இதயத்துக்கும் சுத்தம் வேண்டி வழிபடுவார்கள். அந்தப் பக்தர்கள் ராவணன் ஒரு ராட்சசன் அல்ல. மாறாக, இணையற்ற அறிவு, கெட்டிக்காரத்தனம், புத்திக்கூர்மை, அன்பு ஆகியவற்றுக்கான கடவுள் என்று நம்புகின்றனர்.

ராவணன் கோயில்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காக்கிநாடாவில் ராவணன் கோயில், சிவனுக்கு அடிப்படையில் அர்ப்பணிக்கப்பட்ட ராவணனைச் சிவனின் பக்தனாக ஏற்றுக்கொண்ட கோயில். பெரிய உருவம் கொண்ட சிவலிங்கம் சிலை அந்தக் கோயிலில் இருக்கிறது. ராவணனாலேயே அந்தச் சிவலிங்கம் சிலைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அதனால் இந்த அழகான ஆந்திர நகரில் பலர், ராவணனின் கொடும்பாவியை எரிக்க மாட்டார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நகரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராவண கிராம் என்ற இந்த இடத்தில், ராவணனை வழிபடக் கூடிய ஒரு கூட்டத்தையே காணலாம். தசரா அன்று இங்குள்ள மக்கள் ராவணனின் ஆன்மாவுக்காக அமைதி வேண்டுவார்கள். ராவணனின் கொடும்பாவியை எரிக்க மாட்டார்கள். கன்யாகும்ப பிராமணர்கள் என்போர் தங்கள் வகுப்பைச் சேர்ந்தவர் ராவணன் என்று கூறி, ராவணனுக்கு ஒரு பத்து அடி நீளக் கல் உருவாக்கியுள்ளார்கள். அது பல நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது என்கிறார்கள். ராவணனது உயிரை ஓர் அம்பு துளைத்துக் கொன்று விட்டது என்பதே ஸ்டேட்ஸ்மன் ஆங்கில ஏட்டில், எட்டு இடங்களில் ’ராவணன் கொடும்பாவி எரிக்கப்படாது’ என்ற கட்டுரையின் கட்டுரையாளர் தனது முடிவான வாக்கியமாகக் கூறுகிறார்.

இனியாவது மாறுவோமா?

நாம் இனியாவது தமிழ் அரசர் ஒருவரின் வரலாற்றை மறு வாசிப்பு செய்ய இந்தியத் துணைக் கண்டத்தை நாடப் போகிறோமா, இல்லையா என்பதே கேள்வி. எல்லா விதிகளும் நியதிகளும் வரலாறுகளும் மாற்றப்பட்டு, மறு வாசிப்புக்கு உள்ளாகும் இன்றைய காலத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் விடுத்த கதைகளில்தான் இனியும் செல்வாக்கு செலுத்த வேண்டுமா? உண்மை வரலாறுகள் அடிப்படை மக்களால், ஆதிவாசிகளால் பின்பற்றப்படுகின்றனவே என்பதை நாகரிக உலகம் திரும்பிப் பார்க்குமா?

Related posts