சரியான காதலனை தேர்வு செய்வதில் அதிகமான பெண்கள் தோல்வியடைய காரணமென்ன..?

இளமைக்காலத்தில் காதலனை தேர்வு செய்யும் இளம் பெண்களில் பலர் சரியான காதலனை தேர்வு செய்வதில் தவறிழைத்துவிடுவதை தலைக்கு மேல் வெள்ளம் போன பின்னரே கண்டு பிடிக்கிறார்கள்.

இது நாம் சொல்ல வருவதில்லை. காதலுக்கு கண்கள் இல்லை என்ற பழைய காலத்து பழமொழியும் இதைத்தான் சொல்ல வருகிறது.

பெண்கள் காதலனை தேர்வு செய்வதில் பல இடங்களில் தவறிழைக்கிறார்கள். அவர்கள் எங்கே தவறு விடுகிறார்கள் என்பதை ஆங்கில நூல் ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

அந்த நூல் இப்படியாக தன் கருத்தை முன்வைக்கிறது..

ஓர் ஆணைப் பார்க்கும்போது இவன் எதிர்காலத்தில் எப்படி வருவான் இவனுக்குள் இருக்கும் ஆற்றல் என்ன என்பதை சரியாக அடையாளம் காண்பதற்கு பெரும்பாலான சிறு வயது பெண்களுக்கு அனுபவம் போதியதாக இருப்பதில்லை.

ஓர் ஏழை இளைஞனை பார்த்தவுடன் அவனை நிராகரித்துவிடுகிறார்கள். அதற்காக ஏழையை காதலிப்பதுதான் சரியானதென்று கூறவில்லை. காதலிக்க முன் அவனுக்குள் இருக்கும் நெருப்பையும் வாழத்துடிக்கும் ஆர்வத்தையும் பல பெண்கள் எடை போடத் தவறிவிடுகிறார்கள் என்கிறது.

மாறாக அன்று அவர்கள் கண்களுக்கு வசதியானவனாகவும் கவர்ச்சியானவனாகவும்; கெத்தானவனாகவும் தெரியும் ஒருவனை சரியானவன் என்று கருதி காதலிக்கிறார்கள்.. இந்தக் காதல் பல இடங்களில் சறுகிவிடுகிறது.

காரணம் அந்த இளைஞனின் சிறந்த ஆடைகள் கை நிறைய இருக்கும் பணம் வாகனம் போன்றன உண்மையிலேயே அவனுடையதல்ல அவனின் பெற்றோர் தேடிய பணம் என்பதை பெண்கள் எடைபோட மறந்து விடுகிறார்கள்.

திருமணமான சிறிது காலதில்தான் தெரியும் அவனுக்குள் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ வேண்டும் என்ற நெருப்பு இல்லை என்ற உண்மை. அதன் பின் வாழ்க்கை தொடர்ந்து நாளுக்கு நாள் சறுக்க ஆரம்பிக்கும், ஒரு கட்டத்தில் விவாகரத்தையும் தொட்டுவிடும்.

இது பெண்களுக்கு மட்டுமா இல்லை இதே தவறைத்தான் ஆண்களும் விடுகிறார்கள். ஒரு பெண்ணின் இளமைக்கால அழகு நிரந்தரமல்ல, அவளுடைய குடும்பத்தின் பணமும் நிரந்தரமல்ல அவளுக்குள் எரியும் நெருப்பென்ன வாழ வேண்டுமென்ற துடிப்பென்ன என்பதை பார்க்க இளைஞர்கள் தவறிவிடுகிறார்கள்.

காரணம் என்ன..?

நமது மூளை என்பது பாடசாலை கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்தால் சிறந்த மூளை என்று கருதுது தவறு. ஒருவன் தனது மூளையை வைத்து எதிர்காலத்தையும், புதிய சிந்தனைகளையும் அபாரமாக சிருஷ்டிக்கும்போதுதான் அவன் மூளை தங்க மூளை என்று போற்றப்படுகிறது.

இதனால்தான் பல வெற்றியாளர்கள் பரீட்சைகளில் தோற்றவர்களாக இருக்கிறார்கள். தனது மூளையின் கிரியேட்டிவ் எண்ணங்கள் மூலம் இதற்கு முன்னர் இல்லாத யூனிக் ஆன உலகத்தை அவன் காணும்போதுதான் அவன் மூளை சிறந்த மூளையாகிறது.

ஒருவனோ அல்லது ஒருத்தியோ தன்னிடமுள்ள மூளையால் காணக்கூடிய கற்பனைகளைகளின் எல்லைகளை விட ஐந்து மடங்கு அதிகமாக புதிய விடயங்களை கற்பனை செய்ய முடிகிறதா.. அதை அவனால் செயற்படுத்த முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.

ஆகவேதான் எந்த ஒருவனையும் எந்த ஒத்தியையும் இன்றிருக்கும் நிலையில் வைத்து எடைபோடக்கூடாது.

நாளை அவன் எப்படி வருவான் அவனுடைய எதிர்காலத்திற்குள் சுய பிரகாசம் தெரிகிறதா என்பதை கண்டு பிடிக்கும் ஆற்றல் பெண்களுக்கு வேண்டும்.

இதை விளையும் பயிரை முளையில் தெரியும் என்று முற்காலத்தில் சொன்னார்கள்.

மேலும் ஒரு படி சென்று கஞ்சியை துளாவுவது போல கல்யாணத்தையும் துளாவிப்பார் என்றார்கள்.

துளாவிப்பார்த்தல் என்றால் என்ன..

அந்த விதைக்குள் ஆலமரம் இருக்கிறதா என்பதை கண்டறி என்பதாகும்.

ஜோதிடத்திடமும் சாதகத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கழுத்தை நீட்டியவர்களது கதைகளை கேட்டால் மேலும் விபரம் அறியலாம். சாதகத்தால் சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க முடியாது என்பதை கண்டு பிடிக்கும் அறிவு சாதாரண மூளைக்கு இல்லை. மூளைக்கு வெளியே அபாரமாக சிந்திக்கும்போதே அதைக் கண்டு பிடிக்க முடியும்.

ஆகவே காதலனோ காதலியோ நாளை என்னவாக வருவாள் என்பதை அவர்கள் நடத்தையை வைத்து எடை போடுங்கள் என்கிறது அந்த நூல்.

மேலும் ஓர் உதாரணம் தருகிறது..

நேர்முக பரீட்சை ஒன்றுக்கு வந்த இளைஞர்களில் 70 வீதத்திற்கு மேல் தமது பென்சன் பற்றியே அதிகமாக விசாரித்ததாக நிறுவனம் ஒன்று கூறுகிறது.

பென்சன் கனவுகளில் அலையும் இளைஞர்கள் நிறைந்த உலகம் இது. ஆகவேதான் ஒருவனை இன்றுள்ள சிறப்பை வைத்து சரியானவன் என்று முடிவு கட்டி கழுத்தை நீட்டிவிடாதீர்கள் என்று அந்த நூல் கூறுகிறது.

அரைப்பாவடையுடன் ஒருத்தி வந்தால் அவள் அழகாகவும் இருந்தால் அவளுக்கு பின்னால் ஓடும் தமிழக கதாநாயகனைப் போல அறிவற்ற வேலை செய்துவிடாதீர்கள் என்பதை அந்த நூல் தெளிவாக உணர்த்துகிறது.

ஒருவனை தற்போதைய நிலையில் வைத்து எடை போடுவதற்கு பதிலாக எதிர்காலத்தில் அவன் எத்தகைய உயர் நிலையில் இருப்பான் என்பதை பார்ப்பதற்குரிய சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் வசம் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல அவர் எதை வசப்படுத்த திட்டமிடுகிறார் என்பதுதான் முக்கியம்.

அதைவிடுத்து..

ஆளைப்பார்த்து அழகைப் பார்த்து ஆசை கொள்ளாதே..
ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே..

அலைகள் 19.10.2018

Related posts