நடிகை லட்சுமிக்கு சாதனையாளர் விருது

கர்நாடக அரசு ஆண்டுதோறும் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

கடந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை தேர்வு செய்ய மூத்த கன்னட நடிகர் சீனிவாச மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பழம்பெரும் நடிகை லட்சுமியை தேர்வு செய்துள்ளனர்.

சிறந்த டைரக்டருக்கான புட்டன்ன கனகல் வாழ்நாள் சாதனையாளர் விருது எஸ்.நாராயணனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் 50 கிராம் தங்க பதக்கம், ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழை கொண்டது ஆகும். வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் லட்சுமி 1970 மற்றும் 80–களில் தமிழ், தெலுங்கு, மலையாள, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். மாட்டுக்கார வேலன், எதிரொலி, குமரி கோட்டம், இதய வீணை, புகுந்த வீடு, திருமலை தெய்வம், பாசப்பறவைகள், தியாகம், சம்சாரம் அது மின்சாரம், பொல்லாதவன், சிறை, குடும்பம் ஒரு கோவில் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். லட்சுமிக்கு இப்போது 63 வயது ஆகிறது. இவரது மகள் ஐஸ்வர்யாவும் நடிகையாக இருக்கிறார்.

Related posts