கொழும்பு நகரில் விமானத்தை மோதி தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்

உச்சக்கட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது கொழும்பு நகரில் விமானத்தை மோதி தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர் என அமெரிக்காவில் இலங்கை அதிபர் சிறிசேனா பேசினார்.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினர். விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த போர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முடிவுக்கு வந்தது. அந்தப் போர் முடிந்து இப்போது 9 ஆண்டுகள் முடிந்து விட்டன.

இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் சிறிசேனா, அங்கு நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் சிங்களர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் உச்சக்கட்ட போர் பற்றி கூறியதாவது:-

2009-ம் ஆண்டு சென்னையில் இருந்து வந்த விமானத்தையோ அல்லது பிற விமானத்தையோ கொண்டு கொழும்பு நகரில் தாக்குதல் நடத்தி முக்கிய இலக்குகளை அழிக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர்.

அப்போது (2009 மே மாதம் உச்சக்கட்ட போர் நடந்தபோது) நான் ராணுவ மந்திரி பொறுப்பு வகித்தேன். நெருக்கடியான அந்த நேரத்தில் நாட்டின் அதிபரும் (ராஜபக்சே) பிரதமரும் (ரத்னசிறி விக்ரம நாயக்கா) நாட்டில் இல்லை. ராணுவ அமைச்சக செயலாளரும், ராணுவ தளபதியும் அந்த நேரம் நாட்டில் இல்லை.

இது மிகவும் பாதுகாக்கப்பட்ட ரகசியம். விடுதலைப்புலிகள் விமானத்தை மோதி தாக்குதல் நடத்துவார்கள் என பயந்து அனைத்து மூத்த தலைவர்களும் நாட்டை விட்டு சென்று விட்டனர்.

நானும் கூட அப்போது கொழும்பு நகரில் இல்லை. விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தி விட்டால் என்னாவது என்பதால் நான் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் 2007 மற்றும் 2009 ஆண்டுகளில் கொழும்பு நகரில் 2 முறை விமான தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

Related posts