சென்னையில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா

சென்னையில் நாளை நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழாவில் திரைத்துறையினரை முதல்வர் கே.பழனிசாமி கவுரவிக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, தமிழக அரசின் சார்பில் மாவட்ட வாரியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாக்களில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்றினார். 31 மாவட்டங்களில் நடந்த விழாக்களில் ரூ.5,140 கோடியே 18 லட்சம் மதிப்பில் 2,357 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. ரூ.5,747 கோடியே 24 லட்சத்தில் 3,214 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், ரூ.5,464 கோடியே 79 லட்சம் மதிப்பில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 392 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. இத்துடன், தமிழ்நாடு என பெயர்சூட்டப்பட்டதன் 50-ம் ஆண்டு பொன்விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், எம்ஜிஆரின் உருவப்படத்தை முதல்வர் கே.பழனிசாமி திறந்துவைத்து, நூற்றாண்டு நிறைவு மலரைவெளியிடுகிறார். எம்ஜிஆருடன் திரைத்துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப் பாளர்கள், பின்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், சண்டை பயிற்சியாளர், நடன கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர் ஆகியோர் கவுரவிக்கப்படுகின்றனர்.

சட்டப்பேரவையில் எம்ஜிஆர் ஆற்றிய உரைகள், அவரின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பை வெளியிடும் முதல்வர், பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள், நலத்திட்ட உதவி ஆகியவற்றை வழங்குகிறார்.

விழாவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையேற்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் பி.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

விழாவையொட்டி எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு, அவர் மக்களுக்கு ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங்கள், மக்கள்நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்படக்கண்காட்சியும் தொடங்கப்படு கிறது. தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 31 அரசுத் துறைகள் பங்கேற்கும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் அமைச்சர்கள், பேரவை துணைத் தலைவர், தலைமை கொறடா, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். விழா நிறைவில் செய்தித் துறை செயலாளர் இரா.வெங்கடேசன் நன்றியுரை ஆற்றுகின்றனர்.

Related posts