கடற்புலிகளை அழிக்க உதவியது வாஜ்பாயின் பாஜக

இலங்கையின் வரலாறு தெரியாமல் ஆர்ப்பாட்டம் நடத்தும் அதிமுக என கிண்டலடித்துள்ள ஸ்டாலின், இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக சந்தேகிக்க வேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழப் பிரச்சினையின் அறுபதாண்டு கால வரலாற்றைப் பேசத் தெரியாமல், தி.மு.க.வைப் பற்றி மட்டுமே, முதலமைச்சரில் தொடங்கி அத்தனை பேரும் பேசியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுக.தான் மக்களின் மகத்தான செல்வாக்கைப் பெற்றிருக்கும் இயக்கமாக இருக்கிறது என்ற உண்மை, அ.தி.மு.க.வினரை உறங்க விடாமல் உறுத்திக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்துவிடும்.

ஊழல் ஆவணங்கள் ஒவ்வொரு நாளும் சிக்கிக்கொண்டே இருப்பதால், மாநில ஆட்சியாளர்களைத் தன் கைப்பாவையாக வைத்திருக்கும் மத்திய பாஜக. அரசு இந்த கேலிக்கூத்துப் பொதுக்கூட்டத்தின் பின்னணியில் இருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. காரணம், கொடுங்கோலன் ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரை சந்திக்க வைத்தவரே பாஜக.வைச் சேர்ந்த பிரமுகர்தான்.

அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளை – அவர்களின் கடற்படைப் பிரிவினை ஒடுக்கி அழிப்பதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உதவினார் எனவும் அவர் இல்லையென்றால் எங்களால் கடற்புலிகளை அழித்தொழித்திருக்க முடியாது என்றும் ராணுவ ரீதியான உதவி மற்றும் பயிற்சிகளை வாஜ்பாய் அளித்தார் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அங்குள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று இரங்கல் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.

அப்படியென்றால், அ.தி.மு.கவினருக்கு உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமென்றால், வாஜ்பாய் அவர்கள் சார்ந்திருந்த பாஜகவைக் கண்டித்துதானே முதற் கட்டமாகப் பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். எஜமானர்களை எதிர்த்து எப்படிப் போராட்டம் நடத்த முடியும்? அதுவும் தங்களின் ஊழல் சிண்டு வசமாக டெல்லி எஜமானர்களிடம் சிக்கியிருக்கும் போது அவர்கள் உத்தரவுக்கேற்பத்தானே ஊளையிட முடியும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts