ஒளியை கொடையளித்து சென்றிருக்கும் பாலாஜிக்கு அஞ்சலி

நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.
டேனியல் பாலாஜி: சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. தொடக்கத்தில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் காதாபாத்திரம் கவனம் பெற்று தந்தது.பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து பொல்லாதவன் (ரவி), வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வட சென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக அவர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 48. டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு விஜய்சேதுபதி, அமீர், அதர்வா, இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

Related posts