சேரி என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது

சேரி என்ற சொல்லை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், தன்னுடைய ட்வீட் குறித்து வருத்தம் தெரிவிக்க இயலாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு பேசியதாவது: “சேரி என்பதை நான் பகடியாக கூறினேன். அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம்.

எப்போதுமே என்னுடைய பதிவுகளில் பகடி இருக்கும். ஒரு பெண்ணை பார்த்து தகாத வார்த்தையை பேசுபவர்களை கேட்காமல், நான் ஒரு வார்த்தையை சொன்னதற்காக என்னை கேட்கிறார்கள்.

எனக்கு தெரிந்த மொழியில் தான் நான் பேச முடியும்.

நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பயந்து பின்வாங்கும் ஆள் நான் கிடையாது. சேரி என்று கூறியதற்காக நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

அரசு பதிவுகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது. வேளச்சேரி, செம்மஞ்சேரி ஆகிய பெயர்களுக்கு என்ன சொல்வீர்கள்?” என்று குஷ்பு தெரிவித்தார்.

மன்சூர் அலி கான் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த குஷ்பு, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள்.

அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது” என பதிவிட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பலரும் குஷ்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Related posts