இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெகுஜன சினிமா ரசிகர்களை தன்வசம் கட்டிப் போட்ட ஒரு இயக்குநர் இடம்பெறுவார். அந்தவகையில் 90-களில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் பல்வேறு பிரம்மாண்டங்களை நிகழ்த்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் இயக்குநர் ஷங்கர், இன்று (ஆகஸ்ட் 17) தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆரம்பநாட்களில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘வசந்த ராகம்’, ‘சீதா’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ஷங்கர், சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோரிடம் உதவியாளராகச் சேர்ந்து சினிமா கற்றுக் கொண்டார். 1993ல் ‘ஜென்டில்மேன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கரின் முதல் படமே அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது. இப்படத்தில் இடம்பெற்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடலில் 2டி அனிமேஷனை மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருப்பார் ஷங்கர்.

அடுத்து வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காலா’ பாடலில் தலை, கை, கால்கள் சுடப்பட்ட பிறகும் பிரபுதேவா நடனமாடும் காட்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலில் ஏதேனும் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டத்தை புகுத்துவதை வழக்கமாக கொண்டார் ஷங்கர். பாடல்கள் என்றாலே ஒரு மினி இடைவேளை போல எழுந்து சென்று கொண்டிருந்த ரசிகர்களை அசையாமல் கட்டிப் போட்டது ஷங்கரின் திரை மாயாஜாலம்.

‘இந்தியன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயா மச்சீந்திரா’ பாடலில் கிராபிக்ஸ் மூலம் கமலை ஒவ்வொரு விலங்காக உருமாற வைத்து பிரமிக்க வைத்தார். எல்லாவற்றுக்கும் உச்சமாக ‘ஜீன்ஸ்’ படத்தில் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பிரம்மாண்டத்தை நிகழ்த்தி ரசிகர்களை வாய்ப் பிளக்கச் செய்தார். ’பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ பாடலில் உலகின் ஏழு அதிசயங்களை காட்டியது, ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலில் இரண்டு ஐஸ்வர்யா ராய்களை ஆடவைத்தது, படத்தின் கிளைமாக்ஸில் வரும் டைனோசர் என தொழில்நுட்பத்தில் உச்சம் தொட்டிருந்தார்.

அதுவரை எத்தனையோ படங்களில் இரட்டை கதாபாத்திரங்கள் திரையில் தோன்றியிருந்தாலும், டபுள் ஆக்‌ஷன் என்பதற்கு புதிய இலக்கணத்தை ‘ஜீன்ஸ்’ படத்தில் படைத்திருந்தார் ஷங்கர். அதுவரை வந்த டபுள் ஆக்‌ஷன் படங்களில் இரட்டை கதாபாத்திரங்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்வது போல பெரும்பாலும் காட்டப்பட்டிருக்காது.

இதனை ‘இந்தியன்’ படத்திலேயே ஓரளவு சாத்தியப் படுத்திய ஷங்கர், ‘ஜீன்ஸ்’ படத்தில் மிக நேர்த்தியாக கையாண்டிருந்தார்.

தொடர்ந்து வெளியான ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’ என ஒவ்வொரு படத்திலும் வலுவான திரைக்கதையை தாண்டி பாடல்களிலும் தனது டிரேட்மார்க் பிரம்மாண்டத்தை காட்டினார். தனது கனவுப் படமான ‘எந்திரனில்’ இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கிராபிக்ஸில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தினார். இதற்கு போட்டியாக ‘ரா-ஒன்’ என்ற படத்தை எடுத்து பாலிவுட் தன் கையை சுட்டுக் கொண்டது தனிக்கதை. எப்போதும் தனது சாதனையை தானே முறியடிப்பதுதான் ஷங்கரின் பாணி. தனது முந்தைய படங்களைக் காட்டிலும் தனது புதிய படத்தில் தொழில்நுட்ப நேர்த்தியும், பிரம்மாண்டமும் ஒரு படி கூடுதலாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார் ஷங்கர்.

லோ பட்ஜெட் படமான ‘த்ரீ இடியட்ஸ்’ படத்தைக் கூட தனது பாணியில் இருந்து விலகாமல் மிக நேர்த்தியாக ‘நண்பன்’ என்ற பெயரில் உருவாக்கியிருந்தார். இதுவரை ஷங்கர் இயக்கிய படங்களில் சுமாரான படமாக சொல்லப்படும் ‘ஐ’ படத்தில் கூட தொழிநுட்ப ரீதியாக எந்த குறையும் சொல்லமுடியாது. பாடல்களுக்காக அதிக செலவு செய்கிறார் என்று ஷங்கர் மீது விமர்சனம் வைக்கப்பட்டாலும், பாடலுக்கான நியாயத்தை திரைக்கதையில் சேர்த்து விடுவார் ஷங்கர்.

‘2.0’ படத்துக்குப் பிறகு ராம்சரணை வைத்து ‘கேம்சேஞ்சர்’ என்ற பெயரில் முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்.
திரையுலகில் மூன்று தசாப்தங்களாக ரசிகர்களின் நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்ப திரைப்படங்களை வழங்கி இந்திய சினிமாவின் அதிகம் விரும்பப்படும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் ஷங்கர், மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க இந்த பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.

Related posts