அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத் தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 81.
அதிமுகவின் அவைத் தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன், கடந்த சில மாதங்களாக, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், பின் மெல்ல உடல்நலம் தேறினார். ஏப். 6 அன்று, நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்டிலேட்டர் உதவியுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
பின், கடந்த மாதம் அவருடைய உடல்நலம் மோசமடையவே, சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் சந்தித்து, அவருடைய குடும்பத்தாரிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், இன்று (ஆக. 05) மாலை மதுசூதனன் காலமானார். அவருக்கு வயது 81. அவருடைய மறைவால் அதிமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சைதை துரைசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு விவரங்களை அவருடைய குடும்பத்தினர் விரைவில் வெளியிடுவர்.
இது தொடர்பாக, அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts