பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்க மறுக்கும் சாதுகள்

ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவை முன்கூட்டியே முடித்துக் கொள்ளும்படி பிரதமர் நரேந்தர மோடி கோரியிருந்தார். இதை ஏற்க மறுக்கும் சாதுக்கள் அது, வழக்கமான நாளில் முடியும் என அறிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் முறையானப் பாதுகாப்புகள் கடைப்பிடிக்காமையால், கரோனா பரவல் அதிகமாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையும் மீறி கடந்த ஏப்ரல் 14 இல் 43 லட்சம் பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர். இதில், இரண்டு முக்கிய அஹாடாக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பல சாதுக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால், அவர்களுக்கு போன் செய்து கடந்த வாரம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். ஜுனா அகாடாவின் தலைமை சாதுவான மஹந்த் ஆவ்தேஷாணந்த் கிரியிடம் தான் பேசியது குறித்தும் தனது ட்வீட்டரில் பிரதமர் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து ஜூனா அகாடாவின் மஹந்த் ஆவ்தேஷாணந்த், ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் கும்பமேளா முடித்துக் கொள்ளப்படுவதாக அறிவித்திருந்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 27 இன் ராஜகுளியலுடன் மற்ற மூன்று குளியலும் சடங்காக சேர்த்து முடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் கோரிக்கைக்கு பிறகும் கும்பமேளா வழக்கப்படி மே 27 இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஜூனா அகாடாவின் சர்வதேச காப்பாளரான மஹந்த ஹரி கிரி அறிவித்துள்ளார்.
இது குறித்து மஹந்த ஹரி கிரி கூறும்போது, ‘மே 18 சங்கராச்சாரியார் ஜெயந்தி, மே 26 இல் புத்த பூர்ணிமா உள்ளிட்ட நான்கு ராஜ குளியல்கள் இன்னும் பாக்கி உள்ளன.
எனவே, அனைத்து குளியல்களையும் முடிக்க மே 26 வரை கும்பமேளாவில் சாதுக்கள் தங்குவார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கு மற்ற பல சாதுக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.
இது குறித்து பஞ்சாயத்து நிர்மோஹி அகாடாவின் தலைவரான மஹந்த் ராஜேந்திர தாஸ் கூறும்போது, ‘கரோனா தடுப்பு மீதான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் கும்பமேளாவில் கடைப்பிடிக்கப்படும்.
எனினும், வழக்கத்திற்கு மாறாக கும்பமேளாவின் முன்கூட்டியே முடிக்கக் கோரும் சில சாதுக்களின் அறிவிப்பு இந்து கலாச்சாரத்திற்கு எதிரானது.’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கும்பமேளாவில் நேற்று 634 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், புதிதாக 11 சாதுக்களும் இடம் பெற்றுள்ளனர்.
இத்துடன் சேர்த்து கும்பமேளாவில் மொத்தம் 81 சாதுக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஹரித்துவாரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts