தொடரும் சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் மரணம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல ஓட்டலில் சித்ரா தங்கி இருந்தார். இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.

இந்தநிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் ஆனது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

இந்தநிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத்தும் ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்காக ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ஹேம்நாத் வெளியே சென்றதும் சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டார்.

குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஓட்டல் வரவேற் பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஓட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் அறையின் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைப்பார்த்து ஹேம்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

தற்கொலை செய்த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே சித்ரா தற்கொலை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறினார்கள்.

நடிக்லர் மனோபாலா தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் உடலை காண கீழ்பாக்கம் மருத்துவமனை வந்தார். அங்கு மனோபாலா நிருபர்களிடம் கூறும் போது

நடிகை சித்ரா மிகவும் வலிமையான பெண், சின்னத்திரையில் இது போன்று நிறைய நடக்கிறது பணிச்சுமையை நிறைய ஏற்றுக் கொள்ளாதீர்கள், பணிச்சுமை தான் மனச்சுமையையும் வேதனையும் அளிக்கிறது.

பணிச்சுமை இருந்தால் தயவுசெய்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், உதவி செய்ய நாங்கள் எல்லோரும் தயாராக இருக்கிறோம், அவசரப்பட்டு இதுபோல முடிவு எடுக்காதீர்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது எல்லோரையும் கைகூப்பி கும்பிட்டு வேண்டிக்கொள்கிறேன் தயவுசெய்து இதுபோன்ற விபரீத முடிவுகளை நிறுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.

சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலைகள் செய்து கொள்ளும் முடிவை எடுப்பது சின்னத்திரை கலைஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகைகள் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்த வைஷ்ணவி 2006-ம் ஆண்டு ஏப்ரலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் டிவி சீரியல் இயக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்த ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் இதி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏராளமான சீரியல்களிலும் நடித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது.

சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரவானி. 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த இவர், ஐதராபாத் மதுராநகரில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். திடீரென இரவு தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related posts