மோடி நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நவராத்திரி என்பது மகாசக்திக்கான காலம். சிவனாருக்கு ஒரு ராத்திரி… அது சிவராத்திரி. அம்பாளுக்கு ஒன்பது ராத்திரி… அவை நவராத்திரி என்று சொல்லுவார்கள். சக்தியும் சாந்நித்தியமும் மிக்க நவராத்திரி காலங்களில், அம்பாள் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது நடக்கும். எண்ணிய காரியத்தை ஈடேற்றித் தந்தருள்வாள் அம்பாள் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமர், விஷ்ணு, பிரம்மா, விஸ்வாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், வனவாச காலத்தில் பாண்டவர்கள் முதலானோர் நவராத்திரி பூஜைகள் செய்து, விரதம் மேற்கொண்டார்கள். அம்பிகையை ஆராதித்தார்கள். அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் நாடு முழுவதும் நவராத்திரி கொலு திருவிழா துவங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையாக கொண்டாடப் பட உள்ளது. விழாவை கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி திருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜெய் மாதா தி ! அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் ! அம்பாளுடைய ஆசீர்வாதங்களுடன், நமது நாடு பாதுகாப்பாகவும், மக்கள் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்கட்டும். ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர அவளது ஆசீர்வாதங்கள் நமக்கு பலம் அளிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நவராத்திரியின் முதல் நாளில் தேவி படான் கோவிலில் வழிபாடு செய்தார்.

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா நவராத்திரி திருவிழாவில் பங்கேற்று துர்கா பூஜை நடத்தினார்.

Related posts