100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி

21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:

மகாபாரதத்தில் உள்ள குருஷேத்திரப் போரைவிட கொரோனாவுக்கு எதிரான போர் கடுமையாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அதாவது 2021-ம் ஆண்டு வரை நாம் இந்த வைரஸுடன் போரிட வேண்டும்.

உலக அளவில் நிதிச்சூழலில் சூப்பர் பவராக மாறுவோம் என்று மத்திய அரசு கனவு கண்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டது துரதிர்ஷ்டம், கவலைப்பட வேண்டியதாக இருக்கிறது.

உலக அளவில் கொரோனாவில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவை முந்தி 3-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இப்படியே தொடர்ந்து கொரோனா நோயாளிகள் அதிகரித்தால், துரதிர்ஷ்டமான முதலிடத்துக்கு வந்துவிடும்.

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடந்தது. ஆனால், பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் 21 நாட்களில் வென்றுவிடுவோம் என்று மார்ச் மாதம் தெரிவித்தார்.

ஆனால், தற்போது 100 நாட்களைக் கடந்தும், இன்னும் கொரோனா வைரஸ் இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போர் தொடரந்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைவரும் சோர்வடைந்து வருகிறார்கள்.

மராட்டியத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக குணமடைந்து வருகிறார்கள் என்றாலும், சில பகுதிகளில் பாதிப்பு இன்னும் குறையவில்லை. குறிப்பாக தானே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

கொரோனா வைரஸால் போலீஸார், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு நிர்வாகத்தில் இருப்போர் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படுவது தேசத்துக்கும், மாநிலங்களுக்கும் உகந்தது அல்ல.

கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் இருக்கும், நாம் வாழ்ந்துதான் தீர வேண்டும். 2021-ம் ஆண்டுக்கு முன்பாக கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கப்போவதில்லை. இதன் அர்த்தம், நாம் அதுவரை கொரோனா வைரஸுடன் வாழ்ந்தாக வேண்டும்.

எத்தனை நாட்களுக்குத்தான் நாட்டை லாக்டவுனில் வைத்திருக்கப் போகிறீர்கள். இன்னும் எத்தனை நாட்கள் தொடரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் இன்னும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது”. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related posts