கொரோனா தொற்றிய முதல் இலங்கையர் குணமடைந்தார்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான, முதலாவது இலங்கையர குணமடைந்துள்ளார்.
கடந்த மார்ச் 11ஆம் திகதி 52 வயதான பயண வழிகாட்டியான குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த இரண்டாவது நபர் இவர் ஆவார்.
பல்வேறு பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு, அவரது உடல்நிலை முழுமையாக குணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக, மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விசேட அம்பியுலன்ஸ் வண்டியில் அனுப்பப்பட்ட அவர், மேலும் இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும், 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த நிலையில், சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாக கஹதுடுவை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடித்த நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆக பதிவான நிலையில், தற்போது 86 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 227 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts