8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வெள்ளிக்கிழமை வரை நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு இன்று காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

பின்னர், 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், நண்பகல்12.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (27) காலை 6 மணி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

27 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் குறித்த மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நகர்த்தப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஊரடங்கு உத்தரவின் போது அனைத்து மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை முறையாக கையாள வேண்டும் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சருக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தியுள்ளது.

Related posts