சீன மக்களுக்கு இ-விசாவை இந்தியத் தூதரகம் நிறுத்தியுள்ளது

கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகமாகி வரும் நிலையில் சீன மக்களுக்கும், சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கும் இ-விசா வழங்குவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

சீனாவின் ஹூபி மாநிலத்தில் உள்ள வுஹான் நகரை மையமாக வைத்துப் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 16 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும், 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது
சீனாவின் வுஹான் நகரில் படித்து வந்த இந்திய மாணவர்கள், இந்தியர்களை இரு விமானங்கள் மூலம் இந்திய அரசு அழைத்து வந்துள்ளது. ஏறக்குறைய அங்கிருந்து 650 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு டெல்லி அருகே மனேசரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ள மாணவி உள்பட இருவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் இருவரும் தீவிரமான மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 1,700 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவிலும் கரோனா வைரஸ் பீதி மெல்லப் பரவியுள்ளது. இதையடுத்து சீனாவிலிருந்து வரும் சீன மக்களுக்கும், சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ” கரோனா வைரஸ் போன்ற காரணங்களால் இந்தியாவுக்குச் செல்ல இ-விசா வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சீன பாஸ்போர்ட்டுடன், சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இ-விசா வழங்கப்பட்டிருந்தால் அது செல்லாது.

இந்தியாவுக்குச் செல்ல விரும்புவோர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் அல்லது குகாங்ஜூ நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு காரணங்களைக் கூறி விசா பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts