கெளதம் மேனனுக்கு புகழாரம் சூட்டியுள்ள சூர்யா

திரையுலகிற்கு கெளதம் மேனன் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் சூர்யா.

மாதவன், அப்பாஸ், ரீமா சென் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். 2001-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி இந்தப் படம் வெளியானது. வரும் ஞாயிற்றுகிழமை (பிப்.2) அன்று கெளதம் மேனன், தமிழ் திரையுலகில் தனது 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இதனை முன்னிட்டு சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இதற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வீடியோ வடிவில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு சூர்யாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கெளதம் மேனனுக்கு சூர்யா அளித்த வீடியோ வாழ்த்தில் பேசியிருப்பதாவது:கெளதம் உங்களுடைய 20-ம் ஆண்டுக்கு என் வாழ்த்துகள். 1998-ம் ஆண்டு எழும்பூரில் ஒரு மொட்டை மாடியில் பேச்சுலர் பார்ட்டியில் சந்தித்துப் பேச ஆரம்பித்தோம். அதற்குப் பிறகு சில சந்திப்புகள், 2000-ம் ஆண்டில் ‘காக்க காக்க’ படம் செய்தோம். ‘காக்க காக்க’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’ இல்லாவிட்டால் எனது படங்களின் வரிசை எந்த மாதிரி இருந்திருக்கும் என்று சொல்லவே முடியவில்லை. அந்த நினைவுகளுக்கு நன்றி.

வாழ்க்கை என்பதே ஒரு அழகான நினைவுகளின் தொகுப்பு என்று சொல்வேன். நிறைய இயக்குநர்கள் இந்த இடத்தில் பாடல் வருகிறது என்று எழுதி விட்டுவிடுவார்கள். ஆனால், அந்தக் கதையில் பாட்டை ஒலிப்பதிவு செய்வதற்கு முன்பே 15 வரிகள் வரை இப்படித்தான் இருக்கப் போகிறது, காட்சிகள் இப்படி இருக்கும், வரிகள் இப்படி இருக்கும் என்று நீங்கள் எழுதியது அப்படியே எனக்கு ஞாபகம் இருக்கிறது.

200 முறையாவது மறுபடியும் மறுபடியும் ‘உயிரின் உயிரே’ பாடல் கேட்டுக்கிட்டே இருந்தேன். என் வீட்டிலும் சரி, ஜோதிகா வீட்டிலும் சரி பால்கனி வழியாக அந்தப் பாடல் ஒலிக்கும். அப்போது பலரும் கிடார் தூக்கிக் கொண்டு போய் கொண்டிருந்தார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கிடார் கற்றுக் கொண்டு, “தூக்கங்களைத் தூக்கிச் சென்றாய், ஏக்கங்களைத் தூவி சென்றாய்” என ஜோதிகாவின் பிறந்த நாளைக்கு நான் பாடினேன். அப்படித்தான் ‘வாரணம் ஆயிரம்’ படம் எனக்குச் செய்தது. கெளதமிடம் வெட்கமே இல்லாமல், நான் பாடி கிடார் வாசித்தேன் எனக் காட்டினேன்.

அவரோ நடனம் அமைப்பார், அவரே ஆடுவார். ‘அஞ்சல’ பாட்டுக்கு நான் இப்படித்தான் ஆடினேன் என்று சொல்லியிருக்கிறார். ‘வாரணம் ஆயிரம்’ படம் மற்றும் பாடல்கள் மூலம் எனக்கு பல நினைவுகள் இருக்கிறது. எனக்கு இரண்டு மிகப்பெரிய ஹிட் ஆல்பம் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜிற்கு நன்றி.

இசை என்பது கெளதமின் வாழ்க்கையில் ஒரு பகுதி. அவர்களுடைய குடும்பத்திலும் அப்படித்தான். இசை எப்போதும் அவர்களுடனேயே இருக்கும். அதனால் தான் எப்போதுமே இசையால் கெளதம் மேஜிக் செய்ய முடிகிறது. எந்த படமாக இருந்தாலும், எந்த இசையமைப்பாளராக இருந்தாலும் கெளதம் படத்தின் இசை என்றால் அதற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

என்னோட ‘காக்க காக்க’ நாட்களிலிருந்து இப்போது வரை கெளதம் கொடுத்துக் கொண்டிருக்கும் இசை மெருக்கேறிக் கொண்டே இருக்கிறது. கெளதம் நீங்கள் எனக்குக் கொடுத்த நினைவுகளுக்கு ரொம்ப நன்றி. உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன். மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்துவது சவால் தான். நான் மிகவும் சவாலாகவே பார்க்கிறேன். நீங்கள் சொன்னீர்கள் என்றால் மீண்டும் கிடாரைத் தூக்க நான் ரெடி.
இவ்வாறு சூர்யா பேசியுள்ளார்.

இந்த வாழ்த்து மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், சூர்யா – கெளதம் மேனன் இருவருக்குமே மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிந்தார்கள். சில மாதங்களுக்கு முன்னர் தான் இருவருமே மீண்டும் பேசி சமாதானமாகியுள்ளனர். இதனால், மீண்டும் இருவரும் இணைந்து படம் பண்ணுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தத் தருணத்தில் சூர்யாவின் மனம் திறந்த வீடியோ வாழ்த்தின் மூலம், கெளதம் மேனனுடன் மீண்டும் இணைந்து படம் செய்வார் என்று நம்பப்படுகிறது.

Related posts