நான் கருணாநிதியின் ஆள்: சீமான் பேச்சு

பிரபாகரனைச் சந்தித்த பல நேரங்களில் கண்ணீரே என் பதில் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த நாள் விழா, நேற்று (நவ.26) சென்னை போரூரில், நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனை நேரில் சந்தித்தது குறித்துப் பேசினார்.

அப்போது, “பிரபாகரனை நேரில் சந்தித்தபோது, நான் என்ன உணவு உண்டேன் என்பதைக் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் எழுதிக்கொண்டிருந்தார். “சாப்பிடுவதை ஏன் எழுதுகிறீர்கள்” என அவரிடம் நான் கேட்டேன். அதற்கு நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை பிரபாகரனுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஒரு தலைவர் தன் தம்பி என்ன சாப்பிடுகிறார் என்பதைக் கூட தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். அந்த சமயத்தில் அழுவதைத் தவிர எதுவுமே செய்ய முடியவில்லை.

பல நேரங்களில் பிரபாகரன் என்னுடன் பேசும்போது கண்ணீரைத் தவிர வேறு பதில் என்னிடம் இருக்காது. குறிப்பாக அவர் எம்ஜிஆரைப் பற்றி பேசும்போது மெய் சிலிர்த்துவிடும். இயல்பாகவே மெதுவாகப் பேசும் பிரபாகரன், எம்ஜிஆரைப் பற்றி பேசும்போது மிகவும் மெதுவாகப் பேசுவார். அந்த நேரங்களில், நான் தலைகுனிந்தபடி அழுது கொண்டேதான் இருப்பேன். அதற்கு முன்பு எம்ஜிஆரை பற்றி எந்த மதிப்பீடும் இல்லை. இலங்கைக்கு வண்டி ஏறும் வரை, நான் கருணாநிதியின் ஆள். ஒரு சத்தியத் தலைவனின் பிறந்த நாளில் நான் சத்தியத்தைப் பேசுகிறேன்”.

இவ்வாறு சீமான் பேசினார்.

Related posts