சஜித் ஜனாதிபதியானதும் புதிய அரசியலமைப்பு

நாட்டில் தேர்தலொன்று நடைபெறுகிறதா என்று தெரியாத அளவிற்கு தேர்தல் ஜனநாயக ரீதியில் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரச சொத்துக்கள் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை எனவும் தேர்தல் சட்டங்களை தனியார் ஊடகங்களே மீறுவதாகவும் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானல் தான் பிரதமராக தொடர்ந்தும் பதவி வகிப்பேன் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிய இலங்கைக்கான இடதுசாரிகள் மாநாடு நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பை முன்வைக்கவுள்ளதாகவும் கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இடதுசாரிகளும் ஐ.தே.கவும் இரு துருவங்களாகவே செயற்பட்டன. இன்று எமக்கு ஒன்றாக பணியாற்ற முடிந்துள்ளது. அதிகாரப்பகிர்வு எமது இரு தரப்பினரதும் பொதுவான கொள்கையாக இருக்கிறது.

பாஸிசவாதத்தை தோற்கடிப்பது சகலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. யுத்த காலத்திலும் அதன் பின்னரும் பல உரிமைகளை இழக்க நேரிட்டது. சம்பள உயர்வு கோரியும் எரிபொருள் விலையை குறைக்குமாறும் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. சிறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு முன்னர் இவ்வாறான நிலைமை நாட்டில் காணப்படவில்லை. வன்முறைகளை அடக்குவதற்கு சட்டத்தை செய்படுத்தினாலும் அவ்வாறு நடப்பதை அனுமதிக்க முடியாது. கடந்த அரசாங்கம் யாருக்கும் பொறுப்பு கூறும் வகையில் செயற்படவில்லை.

இந்த நிலையிலே ஜனநாயகத்தை வலுப்படுத்த பல்வேறு குழுக்கள், கட்சிகள் என்பன ஒன்றுபட்டு முன்வந்தன. இன்று அந்த ஜனநாயகத்தை மக்கள் அனுபவிக்கின்றனர்.

நாட்டில் தேர்தலொன்று நடைபெறுகிறதா என்று கூட சிலருக்கு தெரியாது. அரச சொத்துக்கள் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை.தேர்தல் சட்டங்களை தனியார் ஊடகங்கள் தான் மீறுகின்றன. சகல கட்சிகளுக்கும் சமாமான நேரத்தை அவை ஒதுக்குவதில்லை.நீதிபதிகள், அரச ஊழியர்கள், பொலிஸார் என எவருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கப்படுவதில்லை.

இடது சாரி கருத்திற்கமைய கடந்த சில வருடங்களாக கல்வி மற்றும் சுகாதாரத்திறக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.13 வருட கட்டாயக் கல்வி முன்னெடுக்கப்படுகிறது. இடதுசாரி நாடுகளை போன்று இங்கும் கல்விக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.

அடிப்படைவாதிகள் எல்லா பக்கங்களில் இருந்தும் வர ஆரம்பித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் அடிப்படைவாத கட்சிகள் முன்னேற்றமடைந்து வருகின்றன.எமது நாட்டிலும் அடிப்படைவாத கட்சிகளை உருவாக்க முயல்கின்றனர்.அதனைத் தடுக்க வேண்டும். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமித்த பின்னர் நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பொன்றை முன்வைக்க இருக்கிறோம்.ஜனநாயக உரிமைகளை பலப்படுத்துவதற்கு சஜித்தை ஜனாதிபதியாக்குவது உங்கள் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts