ஆணைக்குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2015 ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் நியாயாதிக்க சபைகளில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல், மோசடி, நம்பிக்கைத் துரோகம், அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தல், ஏமாற்றுதல்கள், அரச அதிகாரங்கள், சொத்துக்கள் மற்றும் வரப்பிரசாதங்களின் முறையற்ற பாவனை அல்லது துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால் ஜனாதிபதியிடம் அறிக்கை வழங்கப்பட்டதுடன், ஏனைய உறுப்பினர்களாகிய ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2015 ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் நியாயாதிக்க சபைகளில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல், மோசடி, நம்பிக்கைத் துரோகம், அரச சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தல், ஏமாற்றுதல்கள், அரச அதிகாரங்கள், சொத்துக்கள் மற்றும் வரப்பிரசாதங்களின் முறையற்ற பாவனை அல்லது துஷ்பிரயோகம் ஆகியன தொடர்பாக சுமத்தப்பட்டிருக்கும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிய பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளுதலும் அவ்விடயங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற துரித விசாரணைகளை மேற்கொள்ளுதலும் இவ்வாணைக்குழுவின் செயற்பணிகளாகும்.

————-

கொக்கரல்ல, தல்கொடபிட்டிய பகுதியில் இன்று (07) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், 31 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் 26 பாடசாலை மாணவர்கள் அடங்குவதோடு, அவர்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இந்த விபத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 3 பணியாளர்களும், விபத்திற்குள்ளான பஸ் வண்டிகளின் சாரதிகள் இருவரும் காயமடைந்த நிலையில், குருணாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருணாகலை –தம்புள்ளை பிரதான வீதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலைச் சேவை பஸ் வண்டியொன்றும், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியுமே மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

————–

நாளை மறுதினம் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிக்கு வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அன்றையதினமே மாலை 3மணியளவில் மீண்டும் இந்தியா நோக்கிச் செல்லவுள்ளார். பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேரில் சென்று வரவேற்கவுள்ளார். இதன்போது இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையிலான இருதரப்புச் சந்திப்பு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படுமென தெரியவருகிறது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் கூறினார்.

பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஜனாதிபதி மாளிகையில் செங்கம்பள வரவேற்புடன் கூடிய விசேட வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இச்சந்திப்பைத் தொடர்ந்து இந்திய இல்லத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் , பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனும் சந்திக்க விருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

இச்சந்திப்புகளின் போது அரசியல், பொருளாதாரம் எதிர்வரும் தேர்தல் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து நாளை (8) மாலைதீவு செல்லும் பிரதமர் மோடி நாளை மறுதினம் (9) மாலைதீவிலிருந்து இந்தியா நோக்கிச் செல்லும் வழியிலேயே இலங்கைக்கு மூன்று மணித்தியால விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தனது பயணத்தை முடித்துக்கொண்டு விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையம் சென்று வழியனுப்பி வைப்பார்.

பிரதமர் மோடியின் வருகையையடுத்து சில மணித்தியாலங்களுக்கு கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பின் சில பகுதிகளிலும் தற்காலிக வீதி தடைகள் ஏற்படுத்தப்படுமென்றும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
————

ஜிகாத் கொள்கையை தனிமைப்படுத்தி அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இது பிராந்திய சமாதானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்

இலங்கையுடனான இந்திய உறவுகள் கடந்த ஐந்துவருடங்களில் பாரிய மாற்றங்களை சந்தித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் இடம்பெற்ற தேர்தல்களில் பிரதமர் நரேந்திரமோடிக்கு கிடைத்துள்ள தீர்க்கமான மக்கள் ஆணை அரசாங்கத்தின் கொள்கைகள் தொடரவேண்டும் என மக்கள் விரும்புவதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடி அரசாங்கத்தின் இந்த கொள்கைகள் வலுப்படுத்தப்படுவதும் தொடர்வதும் இலங்கையின் நலன்களுடன் தொடர்புபட்டுள்ளது எனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்திய மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை தெரிவிக்கும் செய்தியுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதமும் தீவிரவாதமும் மனித குலத்திற்கான கூட்டு ஆபத்துக்கள் என தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையில் இடம்பெற்றகுண்டுவெடிப்புகள் இலங்கைக்கானவை மாத்திரமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் எந்த பகுதியில் இடம்பெறும் பயங்கரவாத தாக்குதலும் மனிதகுலத்தின் மனச்சாட்சிக்கு எதிரானது,இது நாங்கள் அனைவரும் ஒன்று என்ற உணர்வின் மீது தாக்குதலை மேற்கொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிகாத் கொள்கையை தனிமைப்படுத்தி அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இது பிராந்திய சமாதானத்திற்கும் உலக சமாதானத்திற்கும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வேண்டுகோள் விடுத்தால் இந்த விடயத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts