முதன்முறையாக நேரடி போட்டியில் ரஜினி -அஜித்

பொங்கல் வெளியீட்டை உறுதி செய்துள்ளது ‘விஸ்வாசம்’ படக்குழு. இதனால் முதன்முறையாக நேரடி வியாபாரப் போட்டியில் ரஜினி – அஜித் படங்கள் களமிறங்கியுள்ளன.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வாசம்’. இப்படம் சில மாதங்களுக்கு முன்பு தனது பொங்கல் வெளியீட்டை உறுதி செய்தது. இதனுடன் போட்டியிட எந்தவொரு படமுமே அறிவிக்கப்படாமல் இருந்தது.

யாருமே எதிர்பாராத விதமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படமும் ‘பொங்கல் வெளியீடு’ என்று விளம்பரப்படுத்தினார்கள். இதனால், ‘விஸ்வாசம்’ படக்குழு முதல் அதிர்ச்சியில் இருந்தது. ஆனால், விநியோகஸ்தர்களிடம் பொங்கல் வெளியீடு சரியாக இருக்குமா என்ற பேச்சுவார்த்தையில் இறங்கியது.

அனைவருமே பொங்கல் வெளியீடு சரியாக இருக்கும் என்று தெரிவிக்கவே, நேற்றிரவு (நவம்பர் 25) மோஷன் போஸ்டர் மூலமாக பொங்கல் வெளியீட்டை உறுதிசெய்தது. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

மேலும், இதுவரை ரஜினி – அஜித் இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியானதில்லை. முதன்முறையாக ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ மூலம் வியாபாரப் போட்டியும் நடைபெறவுள்ளது. எப்போதுமே அஜித் படத்தின் முதல் நாள் வசூல் என்பது மிகவும் அதிகமாக இருக்கும். தற்போது ரஜினி படத்துடன் வெளியாவதால், இது குறைய வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சு நிலவுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது ரஜினியின் ‘பேட்ட’. தனது தொலைக்காட்சியின் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துவது என திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், டிசம்பர் 9-ம் தேதி ‘பேட்ட’ இசை வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி ஒரு பாடலும், டிசம்பர் 7-ம் தேதி மற்றொரு பாடலும் இணையத்தில் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

’விஸ்வாசம்’ படத்தின் டீஸர், பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் தொடங்க படக்குழு ஆயுத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts