ஜமால் காஸ்கோக்கி கொலை சவுதி இளவரசருக்கு தொடர்பு இருக்கிறது..!

சவுதியின் ஊடகவியலாளர் ஜமால் காஸ்கோக்கி கொலையில் சம்மந்தப்பட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை, ஆனால் சவுதி இளவரசர் முகமட் பின் சல்மானுக்கு கொலையில் தொடர்பு இல்லை என்று நேற்று சவுதி அறிவித்திருந்தது.

அந்த செய்தி வெளியாகும் போதே சவுதி அடுத்த கட்ட சிக்கலில் மாட்டிக் கொள்ளும் என்பதை சிறு பிள்ளை அறிவு கொண்டே உணர முடிந்தது.

இப்போது சவுதி இளவரசருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ வெளியிட்டிருப்பதே முக்கிய விடயம். முதல் தடவையாக சி.ஐ.ஏ கருத்துரைத்திருக்கிறது.

வோஷிங்டன் போஸ்ற், சி.என்.என் ஆகிய இரண்டு ஊடகங்களும் இந்த விடயத்தில் சவுதி இளவரசர் இலகுவாக தப்பிவிட முடியாது என்பதை மீண்டும் ஒரு தடவை இடித்துரைத்துள்ளன.

ஏற்கெனவே ஜமால் காஸ்கோக்கி கொல்லப்பட்டபோது நடந்த உரையாடலின் ஒலிப்பதிவை துருக்கி அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. இதில் சவுதி இளவரசருக்கு தொடர்பிருக்கும் ஆதாரங்கள் சில உள்ளன என்கிறது சி.ஐ.ஏ.

காரணம்… அமெரிக்காவில் உள்ள சவுதி தூதரகத்தின் தூதுவராக இருப்பவர் இப்போதைய இளவரசரின் சகோதரரான காலிட் பின் சல்மானாகும். இவரே ஜமால் காஸ்கோக்கியை துருக்கியில் உள்ள தூதரகத்தில் தொடர்பு கொள்ளும்படி கூறியிருக்கிறார் என்பது அந்த ஒலி நாடாவில் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு கூறுகிறது.

ஜமால் காஸ்கோக்கியை தூதராலயத்தில் வைத்து கொலை செய்த மகர் முற்றரப் என்பவர் காஸ்கோக்கி கொல்லப்பட்ட பின்னதாக இளவரசர் தந்த பணி முடிந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

இவை இரண்டும் ஜமால் காஸ்கோக்கி மரணத்தில் சவுதி இளவரசர் முகமட் பின் சல்மானுக்கு தொடர்பிருப்பதை காட்டுகின்றன.

அமெரிக்காவில் உள்ள சவுதி தூதரக பேச்சாளரான பெண்மணி விகாரத்தை இத்துடன் முடிக்கும்படியும் இது முற்றிலும் பொய் செய்தி என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

தவறிழைத்த சவுதியின் விசாரணைகள் திருடனின் கையில் வழக்கை கொடுத்தது போலிருக்கிறது. ஆகவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கா கொலையுடன் சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் 17 பேருக்கு தடைகளை விதித்துள்ளது. அது சவுதி கைது செய்ய சந்தேக நபர்கள்தான். அவர்கள் சிறை மீண்டு சுதந்திரமாக அமெரிக்கா வர முடியாதென்பது சிறுபிள்ளைக்கும் விளங்கும் விடயமே.

சவுதி இளவரசர் என்ன செய்யப்போகிறார்..?
இறந்தவரின் சடலம் எங்கே..?
கைதானவர்களை தம்மிடம் ஒப்படையுங்கள் என்கிறது துருக்கி..!
இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையானால்..
எல்லாவற்றையும் விட பெரும் கொடுமையாக இன்னொரு விவகாரம் மாறும். இளவரசருக்காக கொலை செய்துவிட்டு, இப்போது கழுத்து துண்டிக்கப்படும் அபாயத்தில் சவுதிச் சிறையில் உள்ள கூலிக் கொலைஞர்கள் நிலை. இவர்கள் தமது தரப்பில் சுதந்திரமாக கருத்துரைக்க சவுதியின் நீதி விசாரணையில் இடமில்லை.

இந்த விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது ஐ.நா சபை..?
பணம் இருக்கிற காரணத்தால் சவுதியை மன்னிக்குமா..? இல்லை இனியாவது உலக நீதியை நிலை நாட்டுமா..?
சவால் நிறைந்த இந்த வழக்கு கேள்விகளுடன் புறப்பட்டுள்ளது உலகக் கனவான்களை நோக்கி..
காஸ்கோக்கி பொறியில் சிக்கியது போல சவுதி இளவரசர் பொறியில் சிக்கமாட்டார் என்பதை சொல்லவும் வேண்டுமோ.. சொக்கநாதா..?

அலைகள் 17.11.2018

Related posts