கஜ புயலால் 33 பேர் உயிரிழப்பு

கஜ புயலின் தாக்குதல் காரணமாக தமிழகத்தில் 33 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பத்திரிகையாளர்களிடம் கஜ புயலால் ஏற்பட்ட சேதம் குறித்துபேசிய முதல்வர் புயலுக்கு பிறகான நிவாரண பணிகள் துரிதமாக நடந்துவருவதாகவும் ஐந்து அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளை செய்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

”கஜ புயலால் இதுவரை 33 நபர்கள் உழிரிழந்துள்ளனர். 70 கால்நடைகள் இறந்துள்ளன. கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் கணக்கிடப்பட்டு வருகின்றது. 1.27 லட்சம் மரங்கள் சேதமாகியுள்ளன. 30,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்களை அகற்றி சாலைகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களில்சென்று ஆய்வு நடத்துகின்றனர்,” என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

புயல் பாதிப்பால் சுமார் 30 மான்கள் இறந்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் மேலும் வனவிலங்குகளின் இறப்புகளை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் 351 நிவாரண முகாம்கள் செயல்பட்டுவருவதாகவும், தற்காலிக மருத்துவ முகாம்களில் சுமார் 1.30 லட்சம் மக்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் முதல்வர் தெரிவித்தார். பால் மற்றும் உணவு பொருட்கள் நிவாரண முகாம்களில் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்களுக்கு பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் வேலைகள் நடந்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

நோய்த்தொற்று பரவலை குறைக்க நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். ”இயற்கை பேரிடர்கள் போது நோய் தோற்று பரவுவதை கட்டுப்படுத்துவது முக்கியமான பணி. அத்தியாவசிய மருந்துகள் நிவாரண முகாம்களில் தேக்கிவைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களுக்கு சென்று மருத்துவ உதவிகள் வழங்கிட நடமாடும் மருத்துவ முகாம்களும் செயல்படுவதால், நோய் தொற்றை கட்டுப்படுத்தி வருகிறோம். முகாம்களில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கிவருகிறோம்,” என்று முதல்வர் தெரிவித்தார்.

2015ல் ஏற்பட்ட சென்னை வெள்ளம், 2017ல் கடலோர மாவட்டங்கள் சந்தித்த ஒக்கி புயல் போன்ற நிகழ்வுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தற்போது ஏற்பட்ட கஜ புயலை சமாளிக்க உதவின என்கிறார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். ”கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த இயற்கை பேரிடர்களில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு கஜ புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டோம். இந்த முறை புயல் வருவதற்கு முன்னரே பாதிக்கப்படவுள்ள பகுதிகளில் இருந்த பெரும்பாலான மக்களை முகாம்களில் தங்கவைத்தோம். உயிர்ச்சேதங்களை கட்டுப்படுத்தினோம். அபாயமான இடங்கள், தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை அடிப்படை வசதிகள் கொண்ட முகாம்களில் தங்கவைத்ததால், இறப்புகளை தடுக்க முடிந்தது. வேதாரண்யம் பகுதி பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது. ஆனால் உயிர் இழப்புகளை முடிந்தவரை கட்டுப்படுத்தியுள்ளோம்,” என பிபிசி தமிழிடம் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடச் சென்றபோது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடந்துவரும் நிவாரண பணிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்து வருகிறார். கஜ புயலின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான நாகை மாவட்டம் வேதாரண்யம் உருத்தெரியாத அளவுக்கு நிலைகுலைந்து போயிருக்கிறது என்றும் வேதாரண்யத்தை பேரிடர் பகுதியாக அரசு அறிவித்து மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உணவு மற்றும் குடிநீர் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறி வாகனங்களை மறித்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts