தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை

ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் சபரிமலைக்கு புனித யாத்திரை செய்வதோடு, ஏனைய தென் இந்திய புனிதத் தலங்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

அவர்களின் பயணத்தை இலகுபடுத்துவதற்கும், 100 கிலோவுக்கும் அதிகமான பொதிகளை தம்மோடு எடுத்துச் செல்வதற்கும் வசதியாக தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையே கப்பல் போக்குவரத்தைநடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (17) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப யாத்திரைக்குழுவினருடனான சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

முதலில் புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்தாலும், அத்துடன் சாதாரண பொதுமக்களும், வர்த்தகர்களும் இந்தியாவுக்கான தமது பயணத்தை இலகுவாகவும், குறைவான செலவுடனும் மேற்கொள்வதற்கு வசதியாக இந்தக் கப்பல் சேவை செயற்படுத்தப்படும் என்றும்,

அவ்வாறு கப்பல் சேவை நிரந்தரமாக முன்னெடுக்கப்படும்போது, இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை மக்கள் தமது உடமைகளுடன், பொதிகள் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு முகம்கொடுக்காமல் இலகுவாக தாயகம் திரும்புவதற்குமான வாய்ப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இந்தமத அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் திரு உமாமகேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தார்.

Related posts