பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் ஆரம்பம் !

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சந்திரவன்ச பெரேரா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வேட்புமனுக்களைக் கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை விடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார். எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு 53 நாட்கள் அவசியம். எமக்கு மேலதிகமாக இரண்டு நாட்கள் இருப்பதால் தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை அதிகாரிகள் முன்னெடுப்பார்கள். வேட்புமனு கோருவதற்குப் போதிய அவகாசம் உள்ளது என்ற அடிப்படையிலேயே நாம் செயற்பட வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராய்ந்ததுடன், தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சந்திரவன்ச பெரேராவிடம் ஒப்படைப்பதற்கு முடிவெடுத்தோம். அதனடிப்படையில் அவர் தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ரீதியில் நாம் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கே எதிர்பார்த்திருந்தோம். இதுவரை அவற்றை நடத்தமுடியாமலிருப்பது குறித்து கவலையடைகிறோம். இவ்வாறான நிலையிலேயே பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளது. இதற்கும் தயாராகி வருகின்றோம்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தைக் கோரப்போவதாகத் தான் எந்தவொரு ஊடகத்துக்கும் கூறவில்லையென்றும், உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவதற்கான அதிகாரம் அரசியலமைப்பின் ஊாடாக ஜனாதிபதிக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அதேநேரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியா, பிழையா? என எழுப்பப்படும் கேள்விகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமான பதிலை அளிக்கப்போவதில்லை. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சரி அல்லது பிழை எனக் கூறினால் அது ஒரு தரப்பினரை ஊக்குவிப்பதாகவும் மற்றுமொரு தரப்பினருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிடும். எனவே, நாம் எந்தவொரு தரப்பையும் பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடப்போவதில்லை என்றார். எனினும், நீதிமன்றம் செல்லப்போவதாக சில கட்சிகள் தமக்கு அறிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதும், இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகள் குறித்து மேன்முறையீடு செய்வதற்கு காலம் வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையிலேயே இதனை பூர்த்திசெய்ய எதிர்பார்ந்திருந்தோம். இவ்வாறான நிலையில் திடீனெ பொதுத்தேர்தலை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதால் 2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வருடம் புதிதாக வாக்குரிமையைப் பெற்ற வாக்காளர்களை இணைத்துக் கொள்ள முடியாமை தொடர்பில் கவலையடைகிறோம்.

அதேநேரம், தேர்தல் முடிவடையும் வரை காபந்து அரசாங்கம் இருப்பதால் அமைச்சர்கள் செயற்பட முடியும். எனினும், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் விதிமுறைகளுக்கு அமையவே அவர்கள் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்போது அதற்கான தேர்தலை நடத்துவதற்கான திகதி, வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி என்பவற்றை ஜனாதிபதி அறிவிக்கலாம். பாராளுமன்றம் உரிய காலத்துக்கு முன்னர் கலைக்கப்படுமாயின் அவ்வாறு அறிவிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts