உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 44

எல்லாப்புத்திக்கும் மேலான சமாதானம்.

சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

உலகம்பூராக வாழும் தமிழ்மக்கள் மிகுந்த அவதானத்தோடு, எதிர்பார்ப்போடு காத்திருக்கும் ஓர் மாதந்தான் நவம்பர் மாதம். எமது நாட்டில் நல்ல தீர்மானங்கள் எடுத்து அமைதி ஏற்பட செயற்படுவார்களா என பலஆயிரம் இதயங்கள் ஏக்கத்தோடு காத்திருப்பதை நாம் அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. ஆகவே நாம் அனைவரும் எமது மக்களின் ஆறுதலை மனதிற்கொண்டு இந்த ஒரு நிமிடம் தேவனை நோக்கிப்பார்ப்போம்.

அன்பின் ஆண்டவரே, நீர் மக்களோடு இருக்கும் தெய்வம் என்று வேதம் கூறுவதினால், நாம் அனைவரும் முழுமனதோடு எமது தேசத்து மக்களுக்காக உம்மிடத்தில் வருகிறோம். எம்தேசத்து மக்கள்படும் அவலத்தில்; இருந்து ஓர் நிதந்தரமான அமைதியைக் கண்டுகொள்ள இரங்கும்படியாக வேண்டுகிறேன். உமது இரக்கத்தின் மூலம் நாடும், மக்களும் அமைதியை, சுபீட்சத்தை, வேதனைகளில் இருந்து இளைப்பாறுதலை அடைந்துகொள்ள உதவிசெய்யும். அழிவுகள் ஏற்படாதபடி காத்துக் கொள்ளும்படியாகவும்;, எமது எதிர்காலத்தையும் காத்து வழிநடத்தும் படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே, ஆமென்

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங் களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். எபேசியர் 4:7.

ஒருசில வருடத்திற்கு முன்னர் காலை நேரத்தில் ஒரு குடும்பத்தினர் தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்புகொண்டனர். அப்பொழுது அவர்கள், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் தானே எனகேட்டுக் கொண்டு தங்களையும் அறிமுகம் செய்து கொண்டனர். சுமார் 5 வருடங்களுக்குமுன்னர் என்னைப்பற்றி அறிந்து கொண்ட தாகவும், தாங்களும் பலவேதனைகள் மத்தியில் வாழ்ந்து தேவனை அறிந்ததின்மூலம் இன்று ஓர் அமைதியான வாழ்வை தேவநாமத்தினால் அனுபவிக்கிறோம் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், தங்களின் வாழ்க்கையில் பெரும்பகுதி வேதனை நிறைந்ததாகவும், உற்றார் உறவினர்களாலும், நண்பர்களாலும் பலவகையான வேதனைகளை அனுபவித்து வந்தோம் என்றும், இன்று தேவனை நம்பி வாழ்ந்து வருகிறேம் என்றும், தினமும் அவரைத்தேடுகிறேம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அவர்களின் இந்த சந்தோசத்திற்கான காரணம் இருதயத்தில் எடுத்த ஓர் உறுதியான தீர்மானம் ஆகும் என்றனர். அதுதான் துரோகம் பண்ணினவர்களை, கெடுதல் செய்தவர்களை மன்னித்து வாழ்தல் என்றார்கள்.

மகிழ்ச்சியைப் பெறுவது மிக இலகுவானது. அதை நீங்கள் அடைந்து கொள்ள விரும்பினால், இன்றே உங்கள் உள்ளத்தில் தீர்மானம் எடுங்கள்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இன்றிரவு உறங்கச் செல்லமுன் உங்கள் எதிரிகளை, உங்களுக்கு துரோகம் கெடுதல் செய்தவர்களை, நன்றியற்று நடந்த நடக்கிற மக்களை மன்னியுங்கள். நீங்கள் அடைந்த நல்ல காரியங்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். படுத்திருந்து உங்களின் தேவைகளை கடவுளுக்குத் தெரியப்படுத்தி, அவர் அவற்றை நிறைவாக்கித் தந்திருக்கிறார் என்று நினைத்து அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

அப்போது மற்றவர்களை குறைகூறிக்கொண்டு வெறுப்புடன் வாழும் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்த வாழ்கையாக மாறும். இவற்றில் இருந்து நாம் அறியவேண்டியது, சிந்தையை காத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் அமைதியை அடையமுடியும் என்பதை. இன்று பலரின் வாழ்க்கையில் அமைதியில்லாததற்கு காரணமும் இவைதான்.

இதனை வேதம் இவ்வாறு கூறுகிறது. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:5. இந்த வேதப்பகுதி மிகப்பெரிய உண்மையை நமக்கு விளக்குகிறது. அதாவது தேவபக்தியுள்ளோரின் பாய்க்கியங்களையும், துன்மார்க்கர் (தேவனை அறியாத வர்கள்) செழிப்பில் நிலையாமையையும் வெளிப்படுத்துகிறது. (அமைதியான பயமற்ற இருதயத்தோடு வாழமுடியாமையை வெளிப்படுத்துகிறது).

இந்த உண்மையை அறிந்த தாவீது அரசன், தேவன் மேல் நம்பிக்கை வைக்க அறிவுரைக்கிறார். அதாவது தேவனைச் சார்ந்து வாழ்வதனால் மனிதகுலம் அடையும் ஆறுதலையும், நன்மையையும் அல்லது, ஆசீர்வாதத்தையும் அறிந்து கொள்ள இதனை எமக்கு எழுதியுள்ளார்.

இன்று மாத்திரமல்ல என்றுமே மனிதர்களிடம் மிகமுக்கிய குறை உண்டு. அதை நாம் கிறிஸ்த்தவர்களிடமும், கிறிஸ்த்தவர் அல்லாதவர்களிடமும் கண்டுகொள்ளலாம். எமக்கு பிரட்சனைகள், வேதனைகள் ஏற்படும்போது முதலில் நாம் அனைவரும் கடவுளிடம் செல்கிறோம். முறையிடுகிறோம். இது இயற்கையானது மட்டுமல்ல இயல்பானதும் கூட.

ஆனால் பின்னர் அதனைத் திரும்பவும் சுமந்துகொண்டு எமது அன்றாட வாழ்வுக்குள் செல்கிறோம். பின்னர் நம்மையும் அறியாமல் பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்பட முற்படுகிறோம். முற்பட்டும் இருக்கிறோம். காரணம் நமக்குள் மறைந்திருக்கும் பகையுணர்வு, பழிவாங்கும் தன்மையாவும் வெளிவர ஆரம்பித்து விடுகிறது. இதன் விளைவை நம்மிலும், நம்மைச் சூழவாழ்பவர்கள் மத்தியிலும் நமது கண்களால் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது.

வேதம் இவ்வாறு இதனைக் கண்டிக்கிறது. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். சங்கீதம் 37:8. அத்துடன் நாம் அனைவரும் கீழ்வரும் உண்மையையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம் எல்லாருக்காகவும் அவரை (இயேசுவை) ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8:32.

இன்று சிலவேளை எப்படி நமது பாரங்களை, பிரட்சனைகளை தேவனிடத்தில் ஒப்படைப்பது என்று புரியாமல் இருக்கலாம். இதற்கு இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெந்தக் கடவுள்களின் முன்மாதிரியும் நமக்கு உதவாது. இப்போது இயேசுவை நமது கண்முன் கொண்டு வருவோம்.

அவருடைய பாடுகள் துயரங்களைப்பற்றி நாம் கேள்விப்படுவது, சிந்திப்பது உண்டு. சிலுவையில் மரிப்பது மிகுந்த பாடுள்ளதுதான். சகித்துக் கொள்ளவோ, தாங்கிக் கொள்ளவோ முடியாததுதான். ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அதுதான் பாடுகளின் உச்சக்கட்டம் என்று சொல்வதற்கில்லை. அதிலும் மேலான ஒரு பாடு அவருக்கு இருந்தது. அவரே பாவமாகி தமது பிதாவைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டியநிலை.

நமது ஆண்டவர் முகம் கொடுக்கவேண்டிய மிக முக்கியமான துன்பமாக, பாடாக பிரிவு அது இருந்தது. இது தேவ குமாரனை நிலைகுலைய வைத்தது எனலாம். இதை நாம் மத்தேயு 27:46, மாற்கு 15:34 காணலாம். ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்@ அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். அதற்காக அவர் செய்தது என்ன?

இயேசு அந்தப் பிரட்சனையை, துன்பத்தை எடுத்துக் கொண்டு பிதாவிடம் ஜெபிப்பதற்காக தமது சீடர்களுடன் கெத்செமனே என்னும் ஓர் இடத்திற்குப் போனார். அவரின் சீடர்கள் தூங்கிவிட்டனர். இயேசுவோ இந்தப் பாடுகளை தன்னைவிட்டு நீக்குமாறு பிதாவிடம் மூன்று தடவைகள் ஜெபித்தார். அதன் பின்னர் உமது சித்தம் என்று பிதாவிடம் ஒப்புக் கொடுத்தார். இதனை நாம் மத்தேயு 26:39இல் காணலாம். சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும். ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். இயேசு அந்தப் பிரட்சனையை மீண்டும் சுமந்து செல்லவில்லை. பிதாவாகிய தேவன் நலமானதையே செய்கிறவர் என்பதை திடமாக ஏற்றுக்கொண்டார். அதனால் அவர் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார். அவர் தன்னைப்பிடித்த போர்ச்சேவகர் களுடன் போராடவில்லை.

பிரியமான வாசக நேயர்களே, சற்று சிந்தித்துப்பார்ப்போம், இயேசுவின் வாழ்வு தோல்வியாக முடிந்ததா? இயேசுவானவர் சந்தித்த பாடுகள்போல நாம் சந்தித்தது மில்லை. சந்திக்கவும் மாட்டோம். நாம் எவ்வளவு கொடிய பாவம் செய்தாலும் புறம்பே தள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் ஓர் தெய்வம் நமக்குண்டு. அப்படி ஓர் தெய்வம் நமக்கு இருக்கும் போது, நம்மிடத்தில் இருக்கும் மனக்கசப்புக்களையும், நமக்கு விரோதமாக நடந்த காரியங்களையும் அவரிடம் விட்டுவிட்டு, அவர் மேல் நம்பிக்கையாக இருந்து, அவர் (தேவன்) நமது காரியங்களை வாய்கப்பண்ண எம்மை அவரிடம் ஒப்புக் கொடுப்போம்.

அன்பின் இயேசுவே, இன்று நீர் மனப்போராட்டங்கள், மனக்கசப்புக்கள் என்பவற்றில் இருந்து, உம்மிடத்தில் என்னை ஒப்புக்கொடுப்பதனால் வரும் ஆறுதலையும், பயம் நீங்கிவாழும் விடுதலை வாழ்வு பற்றி அறிய உதவிநீரே நன்றி அப்பா. இயேசுவே, நீர் காட்டிய வழியில் நின்று பிதாவின் பாதத்தில் சகலத்தையும் வைத்து விட்டு, விடுதலையோடும் மனச்சுத்தியோடும் நீர் நடத்தும் வழியில் நடக்க உதவி செய்யும் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts