இன்றைய வாராந்த சிந்தனை புத்தபிக்கு ஒருவரின் ஆங்கில உரை

உறவுகளே நீங்கள் இந்த மதம் அவர்கள் அந்த மதம் என்று அலைய வேண்டாம். மதம் என்ற பெயரில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் அடிடாஸ், நைக், கோகோ கோலா போல வியாபார சின்னத்தை பிரபலப்படுத்தும் வேலை.

இன்றைக்கு உலகம் மதங்களால்தான் போர்க்களமாக மாறியிருக்கிறது. நான் ஒரு பௌத்தன், நான் ஒரு இந்து, நான் ஒரு கிறீஸ்தவன், முஸ்லீம் என்று கூறுவது லேபல் வியாபாரம் போன்றது.

புத்தர் எந்த இடத்திலுமே நான் புத்தமதத்தவன் என்று கூறவில்லை. இயேசு நாதர் எந்த இடத்திலும் நான் கிறீத்தவமதத்தவன் என்று கூறவில்லை. அதுபோல நீங்கள் கடவுளாகக் காணும் தெய்வங்கள் எதுவுமே நான் இந்த மதத்தவன் என்று லேபல் வியாபாரம் செய்யவில்லை.

அவர்கள் வாழ்வதற்கு பல நல்ல கொள்கைகளை சொன்னார்கள். அதனால் அவர்களை மதம் என்ற சிறைக்குள் அடையுங்கள் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. அந்தத் தவறை செய்து, அதிலிருந்து மதத்தின் பேரில் அடுக்கடுக்காக தவறுகளை செய்வது நீங்கள்தான்.

நீங்கள் பைபிள் சொன்னது, குர்ரான் சொன்னது, வேதம் சொன்னது என்று அதன் வரிகளை பின்பற்ற வேண்டிய தேவை கிடையாது. இது செய்தால் அம்மா அடிப்பார் அது செய்தால் அப்பா அடிப்பார் என்ற சிறுபிள்ளை விளையாட்டு போன்றதுதான் வரிக்கு வரி வசனம் பார்த்து நடப்பது.

உங்களுக்கு தெரியும் எது சரி எது தவறு என்பது. முதலில் சரியானதை செய்யுங்கள் தவறு என்பதை செய்யாதீர்கள். தவறுக்கு இணங்காது உங்கள் மூளையை மாற்றுங்கள். அது போதும் உங்களுக்கு மதங்கள் தேவையில்லை.

மதம் என்று பேசுவதில் அர்த்தமில்லை.. அப்படி பேசுவதால் நான் பெரியவன் என்ற ஆணவமே எஞ்சுகிறது.

மதத்தின் சரியான கொள்கைகள் தத்துவங்களை பின்பற்றுங்கள். பல சந்தர்ப்பங்களில் கடவுளே இல்லை என்று கூறும் ஒருவன் கடவுள் இருக்கிறார் என்று கூறுவோரைவிட சிறந்தவனாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். அவனிடம் மத லேபல் இல்லை.

நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்றால் எல்லா மதங்களையும் உயர்வாக மதித்து இணைந்து நடக்கிறீர்களா என்று பாருங்கள்.

மதமாற்றம் என்பது லேபிள் மாற்றம் போல ஒரு வேலை.. அனைத்து மதங்களையும் மதித்து நடப்பவருக்கு எதற்கு மதமாற்றம்.

கடவுள் எந்த இடத்திலும் சிறந்த மதம் இதுவென்று கூறவில்லை. ஆகவே சிறந்த வழியை கடைப்பிடியுங்கள். உலகில் எல்லோரையும் மகிழ்வாக வாழ அனுமதித்து அதனால் நாம் மகிழ்வு பெறுவோம்.

அன்பை நீங்கள் மதம் மாறித்தான் பெற வேண்டியதில்லை. அது உங்களுக்குள் இருக்கிறது. அதை நீங்களே கண்டறிய வேண்டும். அதற்கு நல்ல காரியங்களை செய்யுங்கள்.

எப்பொருள் யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு – வள்ளுவர்

அலைகள் 13.10.2018

Related posts