இன்று மாலை வெளியாகிறது ரஜினி படத்தின் தலைப்பு

ரஜினி நடித்துவரும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், எமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற நவம்பர் 29-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், இன்று மாலை 6 வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். சன் டிவியில் இது வெளியாக இருக்கிறது.

Related posts

Leave a Comment