ஆயுதங்களுடன் நகருக்குள் நுழைந்த ஹமாஸ்

ரஷ்யா – உக்ரைன் போரில் இருந்து கவனத்தை இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் பக்கம் ஒட்டுமொத்தமாக திருப்பிக் கொள்ளலாம் என்பதுபோல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ‘நாங்கள் யுத்தம் செய்கிறோம்’ என்று பிரகடனம் செய்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இன்றைய (சனிக்கிழமை) காலைப் பொழுது சகஜமானதாகத் தொடங்கவில்லை. காலை 8 மணி தொடங்கி 2 மணி நேரத்தில் இஸ்ரேல் முழுவதும் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் துளைத்தெடுத்தன. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் தேசமும், தேச மக்களும் அதிர்ச்சிக்கு உள்ளான சூழலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேரா க்ளைடர்கள் எனப் பலவாறாக இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர்.
பதறவைக்கும் வீடியோ: நகருக்குள் நுழைந்தது மட்டுமல்லாது, கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுக் கொல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் ஒரு வெள்ளை நிற காரில் ஹமாஸ் பயங்கரவாதிகள் வருகின்றனர். அவர்கள் சாலையை நோக்கி குறிவைக்கின்றனர். அதனை ஒரு வீட்டின் மாடியில் இருந்து வீடியோ எடுக்கிறார் ஒருவர்.
அதனை உணர்ந்து கொண்ட ஹமாஸ் தீவிரவாதிகள் அந்தத் திசையை நோக்கி துப்பாக்கியை திருப்புகின்றனர். அத்துடன் அந்தக் காட்சி முடிந்துவிடுகிறது. அந்த நபர் சுடப்பட்டாரா என்பது தெரியவில்லை.
திடீர் தாக்குதல் பின்னணி: இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காசா பகுதி. இது தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது. இஸ்ரேல் பதில் தாக்குதல்களை காசாவை நோக்கி நடத்துவதால் காசா குடிமக்கள் எப்போதும் உயிர் பயத்துடன் தான் இருக்கிறார்கள் என்பது நடுநிலை நாடுகளின் கருத்து.
கடந்த 2021-ல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பெரிய அளவிலான மோதல் மூண்டது. உலக நாடுகளின் தலையீட்டின் பேரில் இந்த மோதல் படிப்படியாக அடங்கியது. இந்நிலையில் இன்று (அக்.7) காலை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை தாக்கின ஏவுகணைகள். வெறும் 1, 2 அல்ல ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் என சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
யுத்தம் செய்கிறோம் – பிரதமர் பிரகடனம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறுகையில், “நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டு வீரர்களை பிணையாகப் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறியது. இதுவரை பொதுமக்களில் 22 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் நாட்டின் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் உறுதி செய்துள்ளது.
காசாவின் வேதனைக் காட்சிகள்: காசா தற்போது தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும் கூட அதனை ஆட்டிவைப்பது என்னவோ ஹமாஸ் பயஙகவாதிகள் தான். இன்றைய தாக்குதலின் விளைவை உணர்ந்த காசா பகுதி மக்கள், அதுவும் குறிப்பாக இஸ்ரேல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிலர் கடைகளில் காய்கறி, உணவுப் பொருட்கள், மருந்து என அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேல் எல்லைப் பகுதியிலிருந்து காசாவாசிகள் தள்ளிச் சென்றுகொண்டிருக்க, இஸ்ரேல் படைகள் தெற்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “தெற்கை நோக்கி இஸ்ரேல் வீரர்கள் விரைந்துள்ளனர். காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகள் எங்கெங்கு இருக்கின்றனர் என்பதை அறிந்து முன்னேறுகின்றனர்” என்று கூறியுள்ளார்.
பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி கண்டனம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. பிரிட்டன் வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, ஹமாஸின் திடீர் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். ஜெர்மனி நாட்டு வெளியுறவு அமைச்சர் அனலெனா பேர்போக், காசாவிலிருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் உடனடியாக தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார். நிலைமை மோசமாகிக் கொண்டிருக்க இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படியும் இஸ்ரேல் பயணத்தை திட்டமிட்ட இந்தியர்கள் அதனை கவனத்துடன் கையாளும்படியும் வலியுறுத்தி பயணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts