இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்: பாலஸ்தீன அதிபர் சொல்வது என்ன?

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களின் தாக்குதலை நியாயப்படுத்தி உள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 4 சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு இளைஞரும் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு சாலைகளில் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதோடு, ஏவுகணைகளைக் கொண்டும் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஹமாஸ் இயக்கத்தினரின் இந்த திடீர் அதிரடி தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் செல்லும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. பலர் உயிருக்கு அஞ்சி தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வாகனங்களில் அவசர அவசரமாகப் புறப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாடு பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் துருப்புகளின் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை அடுத்து பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டதாகவும், அதில் பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், பாலஸ்தீன மக்களின் உறுதியை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

Related posts