பந்தயத்தில் முந்தும் மூத்த நடிகைகள்

சினிமாவில் கதாநாயகர்களை ஒப்பிடும்போது கதாநாயகிகளுக்கு இருக்கும் மவுசு என்பது சொற்ப காலமே. புதிய கதாநாயகிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்துவதும் பழைய கதாநாயகிகளை ஓரங்கட்டுவதும் சினிமாவில் தொடர்ந்து நடக்கும் செயல்.

மூத்த நடிகர்கள் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதும் சீனியர் கதாநாயகிகளின் மார்கெட் சரிய காரணமாக அமைந்து விடுகின்றன. இந்த போட்டியிலும் சில மூத்த கதாநாயகிகள் அசைக்க முடியாத அளவுக்கு பத்து, இருபது வருடங் களாக வெற்றிப்பட நாயகிகளாக வலம் வந்து புதுமுக இளம் நடிகைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று தாக்குப்பிடித்து நிற்பது வியப்பிலும் வியப்பு.

தமிழ் சினிமாவில் சாய் பல்லவி, ராஷி கன்னா, ராஷ்மிகா மந்தனா, ஐஸ்வர்யா லட்சுமி, இவானா, துஷாரா விஜயன், வாணிபோஜன், ப்ரியா பவானி சங்கர், அபர்ணா முரளி, ரித்திகா சிங், அதிதி ஷங்கர், ஐஸ்வர்யா மேனன் உட்பட பல இளம் நாயகிகள் அறிமுகமானார்கள். அவர்களால் இந்த மூத்த நடிகைகளை கடுகளவும் அசைக்க முடியவில்லை. சீனியர் நடிகைகள் என்று வரும்போது முதல் இடத்தில் இருப்பவர் நயன்தாரா.

நாற்பது வயதை நெருங்கும் அவருக்கு திருமணத்துக்கு பிறகு மார்க்கெட் அவ்வளவுதான் என்று தப்புகணக்கு போட்டார்கள். ஆனால், இருபது வருடங்கள் கடந்த பிறகும் தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல்வேறு மொழிகளில் அழுத்தமாக தடம் பதித்து முன்னணி நடிகையாக நீடிக்கிறார். இப்போது ஷாருக்கானுடன் நடிக்கும் `ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அதி ரடியாக நுழைந்துள்ளார்.

அதிக சம்பளம், அதிக படங்கள் என்று தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் இன்றளவும் நயன்தாராவுக்கே முதலிடம். தற்போது, `இறைவன்’, `டெஸ்ட்’, நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் என்று நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்தப் பட்டியலில் நயன்தாராவுக்கு இணையாக இருப்பவர் திரிஷா. சினிமாவில் அடியெடுத்து வைத்து இருபது வருடங்கள் கடந்த பிறகும் இன்றளவும் பிஸியாகவே வலம் வருகிறார்.

`பொன்னியின் செல்வன்’ வெளியீட்டுக்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் மீண்டும் ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்துள்ளது. தற்போது விஜய் ஜோடியாக `லியோ’ வில் நடித்து வரும் திரிஷா கைவசம் `சதுரங்கவேட்டை-2′, `ரோட்’ ஆகிய படங்கள் உள்ளன. `எனக்கு 20 உனக்கு 18′ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் இவருடைய மார்க்கெட் அப்படியே இருக்கிறது.

சமீபத்தில் `கப்ஜா’, `மியூசிக் ஸ்கூல்’ என அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தியுள்ளார். மூத்த நடிகைகள் பட்டியலில் முக்கியமானவர் தமன்னா. 2006-ல் வெளியான `கேடி’ படத்தில் அறிமுகமானார். இப்போதும் தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருக்கிறார்.

தற்போது ரஜினியுடன் `ஜெயிலர்’, `அரண்மனை-4′ படத்தில் நடித்து வருகிறார். `தடையற தாக்க’ படத்தில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் பத்து வருடங்களை கடந்தும் மார்க்கெட்டை அப்படியே தக்க வைத்து இருக்கிறார். கமல்ஹாசனுடன் `இந்தியன் -2′, சிவகார்த்திகேயனுடன் `அயலான்’ உள்பட பல படங்களில் நடிக்கிறார். முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா தெலுங்கில் பட வாய்ப்புகள் வரவே அங்கு கவனம் செலுத்த ஆரம்பித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

2011-ல் `ஆடுகளம்’ படத்தில் அறிமுகமான டாப்ஸியும் இந்த பந்தயத்தில் ஜெயிக்கிற குதிரையாக களமாடி வருகிறார். தற்போது தமிழில் இரண்டு படங்கள், இந்தியில் மூன்று படங்கள் என பிஸியாக இருக்கிறார்.

புது மணப்பெண் ஹன்சிகாவும் சினிமாவுக்கு வந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது `பார்ட்னர்’, `ரவுடிபேபி’, `கார்டியன்’, `காந்தாரி’, `மேன்’ உட்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜோதிகா, மீனா ஆகியோருக்கும் பங்கு உண்டு. தங்களுக்கேற்ற கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து கன ஜோராக நடித்து வருகிறார்கள்.

Related posts