யாதும் ஊரே யாவரும் கேளிர் பலவீனமான திரைக்கதை

ஈழத் தமிழர்களின் இன்னல்களை கதைக்களமாகக் கொண்டு வெளியாகியுள்ளது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இலங்கை போரில் சிக்கி குடும்பத்தை இழந்து தவிக்கும் இசை ஆர்வம் கொண்ட சிறுவன் ஒருவனை பாதிரியார் ஒருவர் லண்டன் செல்லும் ஒரு குழுவுடன் அனுப்பி வைக்கிறார். 18 ஆண்டுகள் கழித்து, கிருபாநதி என்ற பெயரில் கொடைக்கானலுக்கு வரும் ஹீரோ விஜய் சேதுபதி தன்னை மீண்டும் அகதி முகாமில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்.

அங்கு உள்ள ஒரு தேவாலயத்தில் செயல்பட்டு வரும் ஒரு இசைக் குழு மற்றும் பாதிரியார் (விவேக்) ஆகியோருடன் அவருக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அவர்களிடம் தன் பெயர் புனிதன் என்று கூறி அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.

இசைக் குழுவில் இருக்கும் மெட்டில்டா (மேகா ஆகாஷ்) நாயகனின் மீது காதல் வயப்படுகிறார். இன்னொரு பக்கம் விஜய் சேதுபதியை வெறிகொண்டு தேடிக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ராஜன் (மகிழ் திருமேனி). உண்மையில் விஜய் சேதுபதி யார்? அவரது உண்மையான பெயர் கிருபாநதியா? அல்லது புனிதனா? அவரை ஏன் போலீஸ் தேடுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடன் உதவி இயக்குநராக இருந்த வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கியுள்ள இப்படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு ஒருவழியாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அகதிகள் நசுக்கப்படுவதையும், நிலம் என்பது யாருக்கும் சொந்தமல்ல என்பன உள்ளிட்ட ஆழமான விஷயங்களை ட்ரெய்லரில் பேசிய இப்படம், திரைக்கதையில் அதற்கான நியாயத்தை சேர்த்ததா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் டைட்டிலில் பல்வேறு போர்கள் குறித்து காட்டப்படும் மான்டேஜ்களும், படத்தின் ஆரம்பத்தில் ஒலிக்கும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ஆனால், படம் தொடங்கிய ஓரு சில நிமிடங்களுக்காகவே நாம் நினைத்தது தவறு என்பதை உணர வைத்து விடுகிறார் இயக்குநர். ஆரம்பம் முதல் இறுதி வரை அமெச்சூர்தனமான மேக்கிங். அதிலும் முதல் பாதி எதை நோக்கிப் போகிறது என்றே பார்வையாளர்களுக்கு தெரியவில்லை. தொடர்பே இல்லாத பல காட்சிகள் முதல் பாதி முழுவதும் நிரம்பி வழிகின்றன.

படத்தில் நிலச்சரிவில் சிக்கிய தேவாலயம் ஒன்றை காட்டுகிறார்கள், 200 ஆண்டுகால பழைய மணி குறித்த காட்சி, நாயகியின் அப்பாவாக வரும் இயக்குநர் மோகன் ராஜா எதற்கு வருகிறார்? இந்தப் படத்துக்கு நாயகியின் பங்கு என்ன? போலீஸ் அதிகாரியாக இரண்டே காட்சிகளில் வரும் ரித்விகா என படத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏராளமான காட்சிகள். விஜய் சேதுபதி யார் என்ற கேள்வியே படத்தில் இருப்பவர்களுக்கு இடைவேளையின் போதுதான் வருகிறது. அதன்பிறகு தான் படமே தொடங்குகிறது.

சரி, அதன் பிறகாவது கதை நகர்கிறதா என்றால், கதாபாத்திரங்களின் செயற்கையான நடிப்பும், சலிப்பூட்டும் திரைக்கதையும் படத்தை மேலும் தொய்வடையச் செய்கின்றன. முதல் பாதியிலேயே பார்ப்பவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவதால் இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக், மகிழ் திருமேனி – விஜய் சேதுபதி மோதலுக்கான பின்னணி என என்ன ஜாலம் செய்தும் பலனளிக்கவில்லை.

ஹிரோ விஜய் சேதுபதி வழக்கம்போல தனக்கு எது வருமோ அதை செய்திருக்கிறார். பெரிதாக மெனக்கடவில்லை. படத்தில் ஓரிரு இடங்களில்தான் இலங்கைத் தமிழ் பேசுகிறார். இளம் வயதிலேயே கேரளா சென்று விடும் அவர், அதன் பிறகு பல வருடங்கள் அங்கேதான் இருக்கிறார். தனக்கு அடையாளம் வேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக தமிழகம் வரும் அவரிடம் மருந்துக்கும் இலங்கைத் தமிழ் வாடையோ அல்லது மலையாள வாடையோ இல்லை. சரளமாக சகஜமாக தமிழ் பேசுகிறார். டப்பிங்கிலேயே சரி செய்திருக்க கூடிய இந்த ஒரு சிறிய விஷயத்தை கூட அப்படியே விட்டிருக்கிறார்கள்.

படத்தில் கனிகா தவிர்த்து யாரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நடிப்பை வழங்கவில்லை. அதிலும் மேகா ஆகாஷ் நடிப்பு படு செயற்கை. மறைந்த நடிகர் விவேக்கும் வீணடிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு காட்சியையும் வசனம் மூலமாகவே பார்வையாளனுக்கு கடத்தி விடலாம் இயக்குநர் நினைத்து விட்டார் போலும். படம் முழுக்க எல்லா கதாபாத்திரங்களும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பல இடங்கள் சீரியல்களை நினைவூட்டுகின்றன. இலங்கைப் போர் குறித்த காட்சிகள் எதுவும் நமக்கு ஒரு சிறிய தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை. அந்த அளவுக்கு பலவீனமானக் காட்சியமைப்பு. உலகப் போர்கள் குறித்து ஹாலிவுட்டில் இதுவரை எத்தனையோ படங்கள் உண்டு. ஆனால் இலங்கைப் போர் மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆழமான பார்வையை முன்வைக்கும் ஓர் உருப்படியான ஒரு படம் கூட தமிழில் வராதது சோகம்.

நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசை பல இடங்களில் இரைச்சலாகவும், ஒரு சில இடங்களில் இதமாகவும் உள்ளது. அமைதிகாக்க வேண்டியை இடங்களில் கூட வாசித்துத் தள்ள வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை. சிம்பு பாடிய முருகன் பாடலை தவிர மற்ற பாடல்கள் எதுவும் ஒட்டவில்லை. படத்தில் பல இடங்களில் கலை இயக்குநர் கே.வீரசமரின் உழைப்பு தெரிகிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் அந்த தலை உடைந்த புத்தர் சிலை, நிலச்சரிவில் சிக்கிய தேவாலயம் ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் நடக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் சேதுபதி விண்ணப்பிக்கிறார். ஆனால் அவர் அகதி என்பதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

பின்னர் படத்தின் க்ளைமாக்ஸில் அவரது பெயர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறுவது எப்படி? சரி அதை கூட விட்டுவிடலாம். விஜய் சேதுபதியின் பெயரை நிராகரித்ததற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குள் கடும் வாக்குவாதம் எழுகிறது. அதில் ஒரு பெண் ‘இப்படி ஒரு இசை மேதையின் பெயரை எதற்காக நிராத்தீர்கள்’ என்று கேட்கிறார். இசை மேதை என்று லண்டனில் இருப்பவர் சொல்லும் அளவுக்கு படத்தில் விஜய் சேதுபதி என்ன செய்தார்? அதற்கான ஒரு காட்சி கூட படத்தில் இல்லையே. அந்த இசை நிகழ்ச்சியில் ‘என் அன்பு மக்களே’ என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே இருக்கிறார் விஜய் சேதுபதி.

இப்படி படம் முழுக்க சம்பந்தமே இல்லாமல் எதையோ காட்டிவிட்டு, இறுதிக் காட்சியில் மட்டும் படம் சொல்ல வந்த கருத்தை நீண்ட வசனங்களாக வைத்திருப்பது ஆடியன்ஸுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. திரையரங்கில் மயான அமைதி.

நீண்டகாலமாக போரின் பெயரால் இலங்கைத் தமிழர்கள் அனுபவித்து வந்த இன்னல்களையும், அகதிகளாக சென்றவர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்களையும் பேச வேண்டும் என்ற நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால், அதை பார்ப்பவரின் மனதை தைக்கும்படியான ஒரு முழுமையான சினிமாவாக கொடுக்கத் தவறியிருக்கிறார் இயக்குநர். தொய்வான திரைக்கதையாலும், பலவீனமாக காட்சியமைப்புகளாலும் ஒரு நல்ல நோக்கம் நீர்த்துப் போயிருக்கிறது.

Related posts