ஐ.நா. சபை, அமெரிக்கா கடும் கண்டம்

பிரேசில் நாட்டில் அதன் முன்னாள் அதிபர் ஜேர் போல்சனரோ ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்ற கட்டிடங்களில் நுழைந்து அங்கு சேதம் விளைவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதனையடுத்து போலீஸார் போராட்டக்காரர்கள் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள முன்னாள் அதிபர் போல்சனரோ தான் இந்தச் செயலை தூண்டிவிட்டதாக எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பரப்புரை செய்கின்றன என்று கூறினார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றார். ஆட்சிக் கவிழ்ப்பு சதி என்ற புகார் ஏற்பதற்கல்ல என்றும் கூறினார்.

அமெரிக்க அதிபர் கண்டனம்: இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “பிரேசிலில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.

பிரேசிலின் ஜனநாயக நிறுவனங்களுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. அவர்களின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரேஸ் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, “பிரேசில் நாட்டு மக்களின் விருப்பம், ஜனநாயாக அமைப்புகளின் மாண்பு மதிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related posts