போர் இன்னமும் முடியவில்லை.. ( சிறுகதை – கி.செ. துரை )

” சவால் சந்திரலிங்கம் ” கிடைத்த பட்டப் பெயர்போலவே வாழ்க்கையும் சவாலாகிவிட்டது. வெளிநாட்டு வாழ்க்கைக்கு முழுக்குப்போட்டு இலங்கை வந்து ஆரம்பித்த தொழில் ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது..

இப்படி கதையை எடுத்தாலே, ” ஐயோ.. ஆமி, போர், பங்கர் என்று மனம் ஓடும் .. ”

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பிற்காலமாவது பயன்பட வேண்டுமென்றுதான் ஐரோப்பா வாழ்க்கையை விட்டு சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் வந்து குதித்தார் சவால் சந்திரலிங்கம்.

தொடங்கிய தொழில்கள் எல்லாமே வேலைக்கு ஆட்கள் இல்லாத காரணத்தால் மூடு விழாவில் நின்றன. தனி மனிதனாக பாடுபடுகிறார்.. யாருக்காக..? யாரை வேலைக்கு எடுத்தாலும் வரும்போது வானத்தை புரட்டுவது போல வருகிறார்கள்.. ஆனால் மூன்று மாதங்களுக்கு மேல் நின்று பிடிக்கிறார்கள் இல்லை.

ஒவ்வொரு தடவையும் புதிய ஆளை எடுத்து, தச்சுவேலை தொழிலை பழக்கி தயாராக்கி மூச்சுவிட, அடுத்த நாள் ஆள் மாயமாகிவிடும்..

” ஏன் இப்படி..? ” அவருள் பலத்த சிந்தனை..

அப்போதுதான் ஆவரங்கால் சமரசம் வாத்தியாரை சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.. அவர் கேட்ட கேள்விகள் சவால் சந்திரலிங்கத்தை தரையில் போட்டு அடித்தன..

முதற் கேள்வி.. ” உனக்கென்ன விசரே..?”

” ஏன் வாத்தியார் அப்பிடி கேட்கிறியள்.. தாயத்தை மீட்க சவால் விட்டு வந்தனான்.. பிழையே..?”

” சவாலோ.. பலமா சொல்லாத..! இங்கை ஒருதரையும் ஒழுங்கா வேலைக்கு வைச்சிருக்க ஏலாது..!”

” ஏன்..?”

” நீ வேலைக்கு எடுக்கிற பிள்ளையள் போருக்குள்ள பிறந்த பிள்ளையள்..! அவன் ஆமி வந்தால் என்ன செய்வான்..?”

” ஊரை விட்டு அகதியா ஓடுவான்..!”

” குண்டு விழுந்தால்..?”

” போட்டது போட்டபடி பங்கருக்குள் ஓட வேண்டியதுதான்..!”

” குண்டு வீச்சிலை ஒருதன் செத்தால்..?”

” அந்த இடத்தில அடுத்த குண்டும் விழுமெண்டு செத்தவனை போட்டுவிட்டு ஓட வேணும்..!”

” இப்ப விளங்குதே..? படிப்பு, தொழில், ஆடு, மாடு எல்லாத்தையும் போட்டது போட்டபடி ஓடுற வாழ்விலை பிறந்த பிள்ளைளைத்தான் இங்கை அதிகம்..!”

” அதுக்கென்ன போர்தான் முடிஞ்சுதே..?”

” ஆர் சொன்னது..? இஞ்சை போர் முடிஞ்சாலும் ஒண்டுதான்.. போர் தொடங்கினாலும் ஒன்றுதாதன்..! போட்டது போட்டபடி ஓடுற வாழ்வுதான் தொடருது.. இந்த இடத்தை விட்டு அடுத்த இடம் ஓடுவான்.. அங்கை முகாம் அடிச்சது போல கொஞ்சப்பேர் இருப்பான்.. பிறகு அங்கை இருந்து அடுத்த இடம் ஓடுவான்.. இப்பிடி ஊர் ஊரா ஓடினது போல சுத்துறதுதான் வாழ்க்கை..”

” வாத்தியார் நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால், போர் முடிஞ்சுது ஆனா முடியேல்லை..! எண்டமாதிரி எல்லோ கிடக்கு..?”

” போர் மட்டுமல்ல எல்லாமே அப்பிடித்தான்..!”

” அப்ப நான் வெளிநாட்டில இருந்து இஞ்சை வந்தது பிழையே..?”

” தம்பி உன்னை ஆர் தாம்பாளம் வைச்சு அழைச்சது..? இவன் போருக்குள்ளை வாழ்ந்தவன் இன்னமும் போரிலை இருந்து விடுபட இல்லை என்டால், வெளிநாட்டிலை நீங்கள் மட்டும் என்னவாம்..? அதைவிட பெரிய போருக்குள்ளை சிக்கி இருக்கிறியள்.. ”

” இன்னமும் நிதி சேர்க்கிறது..”

” தாயகத்துக்கு உதவுறது..”

” மருந்தில்லை, மின்சாரம் இல்லை, படிப்பில்லை எண்டு ஓடுறது, பணம் அனுப்புறது. இதெல்லாம் ஏன்..? உங்கடை மண்டையளுக்குள்ளேயும் போர்தான் நடக்குது கண்டியே..?”

சந்திரலிங்கம் முதற் தடவையாக தலையை உதறினார்..

” இஞ்சை இருக்கிறவனுக்கு போர்க்கால வாழ்க்கை சுகமாயிருக்கு.. போர் முடிஞ்சாலும் அந்த ஓட்டம் அவனைப் பொறுத்தவரை முடியேல்லை..! போர் வேற.., போர்க்கால வாழ்க்கை வேறை.., போரில்லாமல் போர்க்கால வாழ்க்கை வாழுறதைப் போல சுகம் உனக்கு தெரியாது.. !”

” அப்ப படிச்சு, உழைச்சு..?”

” பொத்து வாயை..! போர்க்காலத்தில அதை சரியா கடைப்பிடிக்க முடியேல்லை.. எல்லாம் முடிஞ்சுது.. இப்ப எதிலேயும் நாட்டமில்லாமல் வாழுறதுதான் சுகமா இருக்கு..”

சந்திரலிங்கம் வாத்தியாரை உற்றுப் பார்த்தார்.. அவர் தொடர்ந்தார்..

” உன்னிலையும் பிழை இருக்கு, உனக்கும் போர்க்கால வேலை பாத்து பாத்தே பழகிப்போச்சு.. எங்கட தலைவர்மார் போல.., அவர்களும் அடிக்கடி போர் முழக்கம் செய்யிறதை பார்த்திருப்பாய்தானே..? எல்லாம் இந்த நோய்க்குறிதான்..! இப்பிடியான குரல்கள் வெளிநாட்டிலேயும் கேட்கத்தான் செய்யுது..”

” அப்ப முடிவுதான் என்ன வாத்தியார்..?”

” முதலிலை நீ உன்ரை மண்டைக்குள்ளே நடக்கிற போரை நிறுத்து.. இவன் இந்த சுகத்தை விட்டு இப்போதைக்கு வரமாட்டான்.. காலம் கிடக்கு.. வேணுமெண்டால் விட்ட பிழைக்கு நீ கண்ணீர்விடு.. ”

” எதுக்கு..?”

” போருக்காகவும், அழிவுக்காவும் அழுறதைவிட, போர்க்கால வாழ்க்கைக்குள் பிடிவாதமாக நாங்கள் வாழ ஆசைப்படுறதை நினைத்து ஓங்கி அழு..!”

சவால் சந்திரலிங்கம் இனி ஒரு சவாலும் விட முடியாது என்று நினைத்தாரோ என்னவோ திகைத்து நின்றார்.

தூரத்தில் யாரோ ஒருவன் வேலை தேடி வருவது தெரிகிறது..!
சேர்க்கலாம் ஆனால் மூன்றே மாதத்தில் ஓடிவிடுவான்..!
என்று அவன் பையை எடுத்துக் கொண்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடாமல் நிற்கிறானோ அன்று அவனளவில் போர் முடிந்திருக்கும்..

” எப்போது போர் முடியும்…?”

சந்திரலிங்கத்தின் முன் இப்போதுதான் சரியான சவால் விழுந்தது..

கி.செ.துரை 29.01.2020

Related posts