30 வருட திரை வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட காதல் படங்கள்

1992-ம் ஆண்டு வெளியான ‘நாளையதீர்ப்பு’ படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகனாக அடியெடுத்து வைத்த விஜய் இன்றுடன் 30 ஆண்டுகளை கடந்திருக்கிறார். அடிப்படையில் ‘விஜய்’ ஒரு மாஸ் நடிகர் என்ற பிம்பம் அவரைச்சுற்றி எழுப்பப்ப்பட்டாலும், அவரை அனைவருக்குமான ஜனரஞ்சக கலைஞனாக்கியது ‘காதல்’ மற்றும் குடும்ப படங்கள் தான்.

இன்னும் சொல்லப்போனால் அவருக்கு பலம் என கூறப்படும் மாஸ்+ ஆக்ஷன் படங்களைக்காட்டிலும் ‘காதல்’ படங்கள் அவரது இமேஜை மக்களிடம் பரவலாக்க உதவியிருக்கின்றன.
உதாரணமாக ‘சச்சின்’ தோல்விப்படம் என கூறப்பட்டாலும் அது இன்றைக்கும் பலரின் ஃபேவரைட். மீண்டும் அப்படியொரு ‘தளபதி’யை பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் நிறைய ரசிகைகளுக்கும், ஏன் ரசிகர்களுக்குமே கூட உண்டு.

அந்தவகையில் இந்த 30ஆவது ஆண்டில் எதிர்தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்த விஜய்யின் காதல் படங்களைப்பற்றி பார்ப்போம்.

விஜய்யை உருவாக்கிய 90ஸ் காதல் படங்கள்:

உங்களால் எந்த விஜய்யை வேண்டுமானாலும் மறந்துவிட முடியும். ஆனால், ‘காற்றினில் சாரல் போல பாடுவேன். காதலை பாடி பாடி வாழ்த்துவேன்… ‘நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்’ என மனதுக்குள் குமிழும் வலியை அழுத்தி போலிச்சிரிப்பை வெளிப்படுத்தும் ‘பூவே உனக்காக’ பட விஜய்யின் ‘ராஜா’ கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமென்றால் நீங்கள் 90ஸ் கிட்ஸ் அல்ல.

க்ளைமேக்ஸில், ‘உன்னை நீங்கி என்னாலும் எந்தன் ஜீவன் வாழாது’ என்ற பாடல் ஒலிக்க நடந்துசெல்லும் விஜய்யை இன்றும் கேடிவியில் கண்டு ரசிப்பவர்கள் இல்லாமலில்லை. படம் காதலின் வழியே குடும்ப உறவுகளை செம்மையாக்கியதன் விளைவு விஜய்யை கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் வசிக்கும் மக்களிடம் கொண்டு சேர்த்தது.

அடர்பச்சை நிற ஃபுல்ஹெண்ட் சட்டையை டக்இன் செய்து, கட்டை மீசையுடன் அப்பாவித்தன முகத்துடன் ஷாலினியைப் பார்க்கும் ‘காதலுக்கு மரியாதை’ ஜீவானந்தம் அழகு! அதுவும் ‘விழியில் விழி மோதி இதய கதவொன்று திறந்ததே’ பாடலில் அவரது ப்ரசன்ட்ஸ் தேடினாலும் இனி கிடைக்காது. நகர்புற இளைஞர்களின் வரவேற்பைப்பெற்ற இப்படம் என்றென்றைக்குமான எவர்கிரீன் க்ளாஸிக்!

அம்மாவின் இறப்புக்கேட்டு செய்வதறியாது கழிவறையில் அமர்ந்து தேம்பியழும் குட்டியுடன் சேர்ந்து அழுதவர்களை இன்றும் நினைவில் வைத்திருக்கின்றன திரையரங்குகள். அந்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள் ‘தேடும் முன்பு வந்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை’ என தோய்ந்த ரத்ததுடன் குட்டி பாடலை பார்த்து உருகாமல் இருந்தால் லைஃப் டைம் செட்டில்மென்ட். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ குட்டி – ருக்கு காதல் விஜய் படங்களின் ரத்தினக்கல்! இதுபோன்ற ஜனரஞ்சக காதல் படங்களால் விஜய் தமிழ் குடும்பங்களில் ஒருவரானார். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவரையும் கவர்ந்தார்.

‘ல்வ டுடே’, ‘ஒன்ஸ் மோர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘என்றென்றும் காதல்’ என 90களில் விஜயின் ஃபிலிமோகிராபியை நிரப்பியிருந்தது காதல் படங்கள். அந்தப்படங்களில் விஜய்யின் க்யூட்டான முக பாவனைகளும் உடல்மொழிகளும் அவருக்கான ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்து. உண்மையில் இன்று அவர்கள் மிஸ் செய்வது அந்த வின்டேஜ் விஜய்யைத்தான்.

90களின் விடலை விஜய்யை இளைஞனாக்கியிருந்தது ‘ஷாஜஹான்’. மெச்சூரிட்டி கூடக்கூட அவர்மீதான வயோதி தோற்றத்திற்கு பதிலாக ஈர்ப்பும் ரசிப்பும்தான் கூடிக்கொண்டிருக்கிறது. இன்றுவரை அது தான் விஜய்க்கான இடத்தை தனித்து நிற்கவைக்கிறது. அப்படி ‘ஷாஜஹான்’ படம் முழுக்க கட்டை மீசையுடன், நாக்கை கன்னத்தின் ஓரத்தில் வைத்து கண்களை சுருக்கி அவர் கொடுக்கும் பாவனைகள், அத்துடன் எந்நேரமும் வெளியேவர தயாராக இருக்கும் புன்சிரிப்பு என ரசிக்கவைத்து, இறுதிக்காட்சியில் கதறி அழுது கலங்க வைக்கும் ‘ஷாஜஹான்’ விஜய் ‘இளைய தளபதி’ படத்திற்கான பக்கா பொருத்தம். ‘மெல்லினமே’ பாடலில் அவரது மென்மையான உடல்மொழியும், ரசிக்கவைக்கும் ரியாக்சன்களும் இன்றும் ரசிக்கத்தக்கவை.

குஷி’, ‘யூத்’, ‘வசீகரா’, சச்சினுக்குப்பிறகு அப்படியொரு ரொமான்டிக் – காதல் விஜய்யை தேடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். உண்மையில் விஜய்க்கு 90கள் மற்றும் 2000களில் தொடக்கம் வரை கைகொடுத்து, கிராம, நகர்ப்புற, இளைஞர்கள், யுவதிகள் வரை கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்கு அவரின் காதல் படங்களுக்கு உண்டு. 30 வருட விஜய்யின் திரை வாழ்க்கையில் அவரின் அதிகபட்ச படங்களாக எடுத்துப்பார்த்தால் அதில் பெரும்பான்மை காதல் படங்கள் தான்.
தொடர்ந்து ஆக்சன்+ மாஸ் என களமிறங்கி அதகளம் செய்துவரும் அவர், மீண்டும் வின்டேஜ் விஜயாக உருமாறி காதல்+ ரொமான்டிக் விஜய்க்கு உயிர்கொடுத்து ஒரே ஒரு அட்டகாசமான காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Related posts