விபத்து; 44 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில், இடம்பெற்ற பஸ் – கனரக டிப்பர் விபத்தில் 44 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் இருந்து முகமாலை நோக்கி A9 வீதியில் சென்றுகொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் பயணித்த பேரூந்து மீது பின்னால் வந்த கனரக டிப்பர் வாகனம் மோதியதில் பஸ் வீதியிலிருந்து புரண்டு வீழ்ந்துள்ளது.

முகமாலையில் அமைந்துள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் Halo Trust நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி வந்த பஸ் வலது பக்கம் திரும்ப முற்பட்ட வேளையில், பின்புறமாக அதே திசையில் பயணித்த மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட சுமார் 44 பேர் யாழ்ப்பாணம், பளை, கிளிநொச்சி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts