வரம்பை மீறி கடன் கேட்கும் இலங்கை

பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயித்து மனிதாபிமான அடிப்படையில் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. ஆனால் உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் தொகையை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கும் நிலையில் இந்தியா மீண்டும், மீண்டும் பெட்ரோல், டீசலை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் என்பதால் இந்தியா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இலங்கையிடம் அமெரிக்க டாலர் கையிருப்பு பிப்ரவரியில் 2.31 பில்லியன் டாலர்களில் இருந்து மார்ச் மாதத்தில் 1.93 பில்லியன் டாலர்களாக ஆக குறைந்தது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. டீசலுக்குரிய பணத்தை செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடிக்கு இலங்கை ஆளானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசல் வழங்கியது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசல் வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்தியாவினால் எரிபொருளுக்காக 500 மில்லியன் டாலர்கள் தொகையுடன், உணவு மற்றும் மருந்துகள் போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வழங்கப்படும் 2.5 பில்லியன் டாலர்களாக வழங்குகிறது. இந்தியா இதுவரை 270,000 டன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களில் 120,000 டன்கள் டீசல் மற்றும் 40,000 டன் பெட்ரோல் விநியோகம் செய்யவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. 500 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிபொருள் உதவியை இலங்கைக்கு வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில் ஏப்ரல் 15-ம் தேதி, 18-ம் தேதி மற்றும் 23-ம் தேதி ஆகிய தேதிகளில் மூன்று 40,000 டன் டீசலை இந்தியா அனுப்ப உள்ளது. அதே அளவிலான பெட்ரோல் ஏப்ரல் 22 ஆம் தேதி அனுப்பப்படுகிறது. கடந்த புதன்கிழமை 36,000 டன் பெட்ரோல் மற்றும் 40,000 டன் டீசல் கொண்ட இரண்டு எரிபொருள் சரக்கு கப்பல்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பியது.இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு சிக்கல்?
இந்தநிலையில் இந்தியா வழங்கிய பெட்ரோல், டீசலுக்காக கடன் வரம்பில் வழங்கப்பட்ட தொகையை இலங்கை செலுத்தும் நிலையில் இல்லை. ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த மாத இறுதிக்குள் எரிபொருளுக்கான கடன் தொகையை இந்தியாவிடம் இலங்கை வழங்கியாக வேண்டும். ஆனால் கடன் வாங்கிய தொகையையும் மற்ற செலவுக்காக இலங்கை பயன்படுத்திக் கொண்டதால் திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளதாக தெரிகிறது.இதனையடுத்து இந்தியா தந்துள்ள கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சுழற்சிமுறையில் கடன் வரம்புக்குட்பட்டு இலங்கை செயல்படாவிட்டால் அந்நாட்டுக்கு பெட்ரோல், டீசல் வழங்கி வரும் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளது. எனவே இலங்கையின் கடன் வரம்பை உடனடியாக உயர்த்துவதில் இந்தியாவுக்கு தயக்கம் இருப்பதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் ஏற்கெனவே வழங்கிய பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தொகையை செலுத்தி கடன் வரம்பை சரி செய்தாப் மட்டுமே தொடர்ந்து எரிபொருள் அனுப்ப முடியும். இந்தியா வழங்கியுள்ள கடன் வரம்பு சலுகையை தொடர்ந்து இலங்கை பயன்படுத்த முடியும்.அதன் பின்னர் இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கும் நடவடிக்கையை நிறுத்திக் கொள் நேரிடும். அவ்வாறு நடந்தால் இந்த மாத இறுதியில் மீண்டும் இலங்கையில் பெட்ரோல், டீசலுக்க பெரும் தட்டுப்பாடு ஏற்படும். கடந்த மார்ச் மாத இறுதியில் சந்தித்த பெரும் நெருக்கடியை இலங்கை மீண்டும் சந்திக்கும் ஆபத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts