காணி சுவீகரிப்பு நடந்தால் வீதியில் இறங்கிப் போராடுவோம்

காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் , சட்டத்தை மீறியேனும் வீதிக்கு இறங்கிப் போராடுவோம் என தாம் வடமாகாண ஆளுநருக்கு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண அபிவிருத்தி சம்பந்தமான கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், விசேடமாக காணி விடுவிப்பு சம்பந்தமாக கலந்துரையாடியிருந்தோம். ஏற்கனவே ஏற்றுக்கொண்ட காணி விடுவிப்புகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தோம். அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

புதிதாக படையினருக்கான காணி சுவீகரிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அதனை நாங்கள் பார்க்க வேண்டும் எனக் கேட்டு இருக்கிறோம். அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அதிலுள்ள நியாயத்தன்மையை நாங்கள் பார்க்க வேண்டும் எனக் கேட்டோம். காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் போராடி நாங்கள் அதனை தடுப்போம். சட்டத்தை மீறியேனும் வீதிக்கு இறங்கிப் போராடுவோம் என்றோம்.

அதனால் அது சம்பந்தமான தெளிவுபடுத்தல் கூட்டங்களை நடத்துவதாக தெரிவித்தார். விடுக்கப்பட வேண்டிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கொட்டடியில் உள்ள சமையல் எரிவாயு களஞ்சியசாலை தொடர்பில் நான் கேள்வி எழுப்பியபோது அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் தெரிவித்தார் – என்றார்.

Related posts