இலங்கை அதிகாரியை அடித்துக் கொன்று எரித்த கும்பல்!

இலங்கையை சேர்ந்த அதிகாரியை அடித்துக் கொன்று எரித்த பாகிஸ்தான் கும்பலை சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் மீது மதத்தை இழிவுப்படுத்தியதாகக் கூறி, அந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து, அவரை சரமாரியாகத் தாக்கி உள்ளனர். பின்னர் அவரை சாலைக்கு இழுத்து வந்து அடித்து, உதைத்தனர். கடும் சித்ரவதையின் காரணமாக சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.பின்னர், அந்த கும்பல் பிரியந்தா குமாராவை சாலையில் தீவைத்து எரித்தனர்.இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கூட்டத்தை கலைத்தனர்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் தெஹ்ரீக்- ஏ -லைப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தில் தொடர்புடையதாக அதே தொழிற்சாலையை சேர்ந்த 50 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய புனித வசனங்கள் அடங்கிய போஸ்டரை மேலாளர் கிழித்ததாகவும், அதனால் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இலங்கை மேலாளர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts