உலகில் செலவு மிகுந்த நகரம் எது?

உலகில் மக்கள் வாழ அதிக செலவாகும் நகரம் எது எனும் கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்தது. பொருளாதார புலனாய்வு பிரிவின் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டில் முதல் இடம் வகித்த பாரிஸ், சுரிச் மற்றும் ஹாங்காங் நகரங்கள் தான் மீண்டும் முதலிடம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் அதிக செலவு மிகுந்த நகரமாக மாறியுள்ளது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

உலகில் பணவீக்கம் ஏற்றத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக போக்குவரத்துக்கான தொகை மற்றும் பொருட்களின் விலை 3.5 சதவீதம் அதிகமாக உயர்வடைந்துள்ளன. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்ததால் உலகின் அனைத்து இடங்களுக்கும் போதுமான அளவில் பொருட்கள் கிடைக்கவில்லை, இதன் காரணமாக விலையேற்றம் நடந்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் போக்குவரத்துக்கான செலவு அதிகம்.மேலும், பொருட்கள் வாங்குவதற்கான செலவும் அதிகம். உலகிலுள்ள 173 நகரங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, டெல் அவிவ் 5 இடங்கள் முன்னேறி முதல் இடம் வகிக்கின்றது. பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் இரண்டாம் இடம் வகிக்கின்றன. சுரிச் மற்றும் ஹாங்காங் அடுத்தடுத்த இடங்கள் வகிக்கின்றன. நியூயார்க் 6வது இடத்திலும், ஜெனிவா 7வது இடத்திலும் உள்ளன.

பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்துள்ளதால் கராக்கஸ், டமாஸ்கஸ், பியூனஸ் ஏர்ஸ், டெஹ்ரான் ஆகிய நகரங்கள் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஈரானின் தலைநகரான டெஹ்ரான் நகரில் நிலவும் அதீத பணவீக்கம் காரணமாக, இந்த பட்டியலில் 79வது இடத்தில் இருந்த அந்த நகரம் 50 இடங்கள் முன்னேறி 29வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts