முதல் பார்வை: மாநாடு

துபாயில் பணியாற்றும் அப்துல் காலிக் (சிம்பு) நண்பனின் திருமணத்தை நடத்தி வைக்க இந்தியாவுக்கு வருகிறார். விமானத்தில் அவருக்கு அறிமுகமாகிறார் சீதாலட்சுமி (கல்யாணி ப்ரியதர்ஷன்). அவரிடம் பேசுகையில் தான் செல்லும் அதே திருமணத்துக்குத் தான் அவரும் செல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறார் சிம்பு. மணப்பெண்ணை அங்கிருந்து கடத்தி அவரைத் தனது நண்பன் பிரேம்ஜிக்குத் திருமணம் செய்துவைப்பதுதான் சிம்புவின் திட்டம்.

மணப்பெண்ணை மற்றொரு நண்பரான கருணாகரன் உதவியுடன் காரில் அழைத்துச் செல்லும்போது காரின் குறுக்கே ஒருவர் வந்து விழுகிறார். அடிபட்டுக் காயங்களுடன் கிடக்கும் அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல எத்தனிக்கும்போது அங்கு வரும் போலீஸ் அதிகாரியான தனுஷ்கோடி (எஸ்.ஜே.சூர்யா) அவர்கள் நால்வரையும் ஒரு பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அன்று இரவு நடக்கும் மாநாட்டில் முதலமைச்சரைக் கொலை செய்வதுதான் எஸ்.ஜே.சூர்யாவின் நோக்கம். அதற்கு ஏற்பாடு செய்திருந்த ஆள் சிம்புவின் காரில் அடிபட்டு விட்டதால் தனது திட்டத்துக்கு சிம்புவைப் பயன்படுத்துகிறார் எஸ்.ஜே.சூர்யா.

மாநாட்டுத் திடலுக்குச் செல்லும் சிம்பு அங்கு துப்பாக்கியை எடுத்து முதலமைச்சரைக் கொல்கிறார். அதன் பிறகு அங்கு வரும் போலீஸார் சிம்புவைச் சுட்டுக் கொல்கின்றனர். மீண்டும் விமானத்தில் கண்விழிக்கிறார் சிம்பு.மேலே கூறிய சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. எந்த முறையில் முயற்சி செய்தாலும் மீண்டும் மீண்டும் கொல்லப்பட்டு விமானத்தில் கண்விழிக்கிறார் சிம்பு. எதனால் அந்த நாள் மீண்டும் மீண்டும் நடக்கிறது. முதலமைச்சரை எதற்காக எஸ்.ஜே.சூர்யா கொல்லத் திட்டமிடுகிறார்? இந்தக் கேள்விகளுக்கு குதிரை வேக திரைக்கதை மூலம் பதில் சொல்கிறது ‘மாநாடு’.

பொதுவாக சயின்ஸ் ஃபிக்சன் படங்களுக்கான திரைக்கதையை அமைக்கும்போது இருக்கும் மிகப்பெரிய சவால் படத்தில் என்ன புருடா விட்டாலும், பார்ப்பவர்களை நம்பவைக்க வேண்டும். ஹாலிவுட்டில் ஹாரி பாட்டர் தொடங்கி மார்வெல் படங்கள் வரை நம்பமுடியாதவற்றை நம்மை யோசிக்க விடாமல் செய்வதுதான் திரைக்கதையின் ஜாலம். அந்த வகையில் டைம் லூப் என்ற சிக்கலான களத்தை எடுத்துக்கொண்டு அதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

நாயகன் அப்துல் காலிக்காக சிம்பு. நீண்ட நாட்களுக்குப் பிறகு படு ஃப்ரெஷ்ஷான சிம்புவைப் பார்க்கமுடிகிறது. தனது வழக்கமான ஆர்ப்பாட்டங்களோ, பன்ச் வசனங்களோ எதுவுமின்றி இயல்பாக நடித்திருக்கிறார். டயலாக் டெலிவரி, எமோஷனல் காட்சிகள் என அனைத்திலுமே வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். சிம்புவுக்கு இது ஒரு உண்மையான கம்பேக் படம்.

சிம்புவுக்கு இணையான கதாபாத்திரம் எஸ்.ஜே.சூர்யாவுடையது. மனிதர் கிடைக்கும் கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வலிமையான வில்லன் பாத்திரம்.

நாயகியான கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை. அதே நேரம் அவருக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் என்று சொல்லிப் படத்துக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் எதையும் வைக்காதது ஆறுதல்.

எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், கருணாகரன், பிரேம்ஜி என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். வெங்கட் பிரபுவின் முந்தைய படங்களைப் போல படம் முழுக்க நாயகன் கூடவே வந்து எரிச்சலூட்டும் வசனங்களைப் பேசும் பிரேம்ஜி இதில் அடக்கி வாசித்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு நாயகன் என்று யுவனை தாராளமாகச் சொல்லலாம். ட்ரெய்லரில் வந்த ‘மாநாடு’ தீம் இசை வரும் ஒவ்வொரு முறையும் அரங்கமே அதகளமாகிறது. படத்தில் வரும் ஒரே பாடலான ‘மெஹர்சைலா’ மனதில் நிற்கிறது. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். படம் முழுக்க எடிட்டர் பிரவீனின் உழைப்பு தெரிகிறது.

படத்தின் குறையென்றால் சிம்பு ஆரம்பத்தில் திருமணத்துக்குச் செல்வதற்கு முன் வரும் காட்சிகளும், அங்கு வரும் பாடலும் கதைக்குத் தொடர்பில்லாதவை. அதே போல சிம்புவின் அறிமுகக் காட்சிக்கு முன் ஒருவரிடம் விமானி ஒரு முக்கியமான ஆளுக்காக விமானம் காத்திருக்கிறது என்று சொல்கிறார். ஒரு விமானத்தையே காக்க வைக்கும் அளவுக்கு சிம்பு யார் என்ற கேள்விக்கு படத்தில் பதில் இல்லை. அந்த அளவுக்கு முக்கியமான ஆளாகவும் அவரைப் படத்தில் காட்டவில்லை. முழுக்க முழுக்க சிம்புவின் பில்டப்புக்காகவே வைக்கப்பட்ட காட்சி அது. அதேபோல அடிக்கடி கேமராவைப் பார்த்து ‘எதிர்காலத்தை தெரிஞ்சவன் அமைதியாதான் இருப்பான்’, ‘எதுவுமே பண்ணாததாலதான் இப்டி மாறிட்டேன்’ போன்ற வசனங்களை சிம்பு சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இதுபோன்ற சின்ன சின்னக் குறைகள் எல்லாம் திரைக்கதையின் குதிரை வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றன. காட்சிகள் மீண்டும் மீண்டும் வரவேண்டியிருப்பதால் கத்தி மேல் நடப்பது போன்ற கதைக்களத்தைச் சற்றும் அதற்கான நேர்க்கோட்டிலிருந்து விலகாமல் படமாக்கிய இயக்குநரைப் பாராட்டத்தான் வேண்டும்.
நீண்ட தாமதம், கடைசி நேர இழுபறி எனப் பல்வேறு சிக்கல்களைக் கடந்த வந்த ‘மாநாடு’ அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் என்பது உறுதி.

Related posts